மதுரை அருகே விடுதியில் 15 வயது ஐடிஐ மாணவரை சக மாணவர்கள் ராகிங் செய்த வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக 4 மாணவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கல்லூரியில் இருந்தும் அவர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

Continues below advertisement

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே செக்கானூரணி பகுதியில் அரசு கள்ளர் பள்ளி மாணவர் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு பள்ளி மாணவர்கள் உடன், அரசுக் கல்லூரி மாணவர்கள், அரசு ஐடிஐ கல்லூரி மாணவர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் தங்கி உள்ளனர்.

வெளியான ராகிங் வீடியோ

இந்த நிலையில், மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகேயுள்ள வில்லூர் கிராமத்தை சேர்ந்த மாணவர், தேனி மாவட்டம் மயிலாடும்பாறை, கோட்டூர் பகுதியை சேர்ந்த 3 மாணவர்கள், மதுரை அச்சம்பத்து பகுதியை சேர்ந்த 3 மாணவர்கள் ஆகியோர் தொழிற்பயிற்சி கல்லூரியில் சேர்ந்து படித்து வருகின்றனர். இவர்கள் செக்கானூரணி மாணவர் விடுதியில் உள்ள ஒரே அறையில் தங்கி உள்ளனர்.

Continues below advertisement

இதற்கிடையில், அந்த மாணவர்களில் ஒருவரை சக மாணவர்கள் கேலி, கிண்டல் செய்துள்ளனர். அத்துடன் நிற்காமல், நிர்வாணப்படுத்தி அந்தரங்க உறுப்பின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். காலணியால் அடித்தும் துன்புறுத்தி உள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவர், சற்றே மனநிலை பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதை அறையில் இருந்த மற்றொரு மாணவன் தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

மாணவர்கள் மீது வழக்குப்பதிவு

இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை செக்கானூரணி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் செக்கானூரணி போலீசார் விசாரணை நடத்தினர். இதில், சம்பந்தப்பட்ட மாணவர்கள் அனைவரும் 17 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது தெரிய வந்தது.

இதையடுத்து, ராகிங் செய்த 3 மாணவர்கள் மற்றும் அதனை வீடியோவாக எடுத்து இணையத்தில் பரப்பிய மாணவர் ஆகிய 4 பேர் மீதும், ராகிங் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கல்லூரியில் இருந்தும் அவர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.