மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் நடத்தப்படும் சிஏபிஎஃப் தேர்வு, தமிழ் உள்ளிட்ட 13 மாநில மொழிகளில் நடத்தப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளதற்கு முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். அத்துடன் மத்திய அரசின் அனைத்துத் தேர்வுகளுக்கும் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் வினாத்தாள்களை வழங்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் நடத்தப்படும் சிஏபிஎஃப் தேர்வு தமிழ் உள்ளிட்ட 13 மாநில மொழிகளில் நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நடைமுறை 2024ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலம் , இந்தியில் மட்டுமே நடத்தப்படும் தேர்வுகள்
ஜூன் மாதம் நடைபெற உள்ள சிஆர்பிஎஃப் தேர்வில் மொத்தமுள்ள 9,212 காலிப் பணியிடங்களில் 579 பணியிடங்கள் தமிழ்நாட்டில் நிரப்பப்படவுள்ளன. தமிழ்நாட்டில் 12 மையங்களில் இந்தத் தேர்வு நடைபெற உள்ளது.
ஆண்டாண்டு காலமாக இந்தத் தேர்வுகள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் தமிழ்நாட்டில் இருந்து இந்த தேர்வுக்கு விண்ணப்பிப்போர் சொந்த மாநிலத்திலேயே தங்கள் தாய்மொழியில் தேர்வினை எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்குக் கடிதம் எழுதினார். அதேபோல தமிழக அமைச்சரும் திமுக இளைஞரணித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின், போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் சிஏபிஎஃப் தேர்வு தமிழ் உள்ளிட்ட 13 மாநில மொழிகளில் நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த நடைமுறை 2024 ஜனவரி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் இளைஞர்கள் பயன்பெறுவர்
தமிழ், அசாமி, பெங்காலி, குஜராத்தி, மராத்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஒடியா, உருது, பஞ்சாபி, மணிப்புரி ஆகிய மாநில மொழிகளில் தேர்வு நடைபெறுவதால், அனைத்து இளைஞர்களின் தங்களின் தாய் மொழியிலேயே தேர்வு எழுத முடியும். இதன்மூலம் லட்சக்கணக்கான உள்ளூர் இளைஞர்கள் பயன்பெறுவர். இதுகுறித்து மாநில அரசுகளும் யூனியன் பிரதேசங்களும் உரிய வழிகாட்டல்களை இளைஞர்களுக்கு வழங்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்காக மத்திய உள்துறை அமைச்சகமும் அரசுப் பணியாளர் தேர்வாணையமும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட உள்ளன.
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளதற்கு முதல்வர் ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ''நான் அமைச்சர் அமித் ஷாவுக்கு எழுதிய கடிதத்தின் விளைவாக, சிஏபிஎஃப் தேர்வுகள் அனைத்து மாநில மொழிகளிலும் நடத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்த முடிவை நான் முழு மனதுடன் வரவேற்கிறேன். மத்திய அரசின் அனைத்துத் தேர்வுகளுக்கும் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் வினாத்தாள்களை வழங்கவேண்டும்'' என்று முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.