1 முதல் 5ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை முடிந்து அக்.9-ம் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. 6- 12ஆம் வகுப்பு வரை அக்.3 அன்றே பள்ளிகள் திறக்கப்பட உள்ளன.
பள்ளி மாணவர்களுக்கு இன்று (27.09.2023) வரை முதல் பருவத் தேர்வுகள் நடைபெறுகின்றன. பள்ளிக் கல்வித்துறை 2023-2024 கல்வியாண்டு நாட்காட்டியில் இரண்டாம் பருவ பள்ளிகள் திறப்பு 03.10.2023 என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
இந்நிலையில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மட்டும் 28.09.2023 முதல் 08.10.2023 முடிய முதல் பருவத் தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பருவத் தேர்வு விடுமுறை முடிந்து 09.10.2023ஆம் தேதியிலிருந்து ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு வழக்கம் போல் பள்ளிகள் மீண்டும் செயல்படும்.
என்ன காரணம்?
அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கற்பித்தல் பணியினை மேற்கொள்ளும் ஆசிரியர்களுக்கு இரண்டாம் பருவத்திற்கான பயிற்சி ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மற்றும் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வாயிலாக ஒன்றியம்தோறும் 03.10.2023 முதல் 05.10.2023 முடிய இரண்டு கட்டங்களாக வழங்கப்பட உள்ளது.
இந்த பயிற்சியில் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை கற்றல் - கற்பித்தல் பணியினை மேற்கொள்ளும் ஆசிரியர்கள் தவறாது கலந்துகொள்ளவும் பயிற்சி நாட்கள் தவிர்த்த பிற நாட்களில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரிந்து இரண்டாம் பருவத்திற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ளவும் உரிய அறிவுரைகளை வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் அனைத்து பள்ளிகளுக்கும் தகவல் வழங்கிட அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இரண்டாம் பருவ வகுப்புகள்
அதே வேளையில், அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் நடுநிலைப் பள்ளிகளில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 2023– 2024 கல்வியாண்டு நாட்காட்டியில் குறிப்பிட்டுள்ளது போன்றே 03.10.2023 முதல் இரண்டாம் பருவ வகுப்புகள் தொடங்குகிறது.
இந்த மாணவர்களுக்கான கற்றல் கற்பித்தல் பணிகளை நடுநிலைப் பள்ளிகளில் ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை கையாளும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டும் என வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் அனைத்து பள்ளிகளுக்கும் தகவல் வழங்க அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி ) அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொடக்கக் கல்வி இயக்குநர் இதுகுறித்த அறிவுறுத்தல்களை அனைத்து மாவட்ட, வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு வழங்கி உள்ளார்.