அரசுப் பள்ளிக்கு ரூ.7 கோடி மதிப்பில் 1.5 ஏக்கர் நிலம் கொடுத்த பூரணம் அம்மாள் மதுரை பெற்றோர் ஆசிரியர் கழக மண்டல மாநாட்டில் மாநாட்டில் கவுரவிக்கப்படுவார் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். 


மதுரை ஒத்தக்கடை அருகில் உள்ள கொடிக்குளம் அரசு பள்ளிக்கு ரூபாய் 7.50 கோடி மதிப்பில் உள்ள 1.5 ஏக்கர் நிலத்தை வழங்கியுள்ளார் ஆயி பூரணம் அம்மாள் என்ற பெண். கனரா வங்கியில் எழுத்தராக ஆயு அம்மாள் பணி செய்துவருகிறார். இவரை மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் அண்மையில் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து நன்றியும், பாராட்டையும் தெரிவித்தார்.


இந்த நிலையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ஆயி பூரணம் அம்மாளை தொலைபேசியில் அழைத்துப் பேசினார். அப்போது நன்றியும் தெரிவித்தார். தொடர்ந்து, பூரணம் அம்மாள் மதுரை பெற்றோர் ஆசிரியர் கழக மண்டல மாநாட்டில் மாநாட்டில் கவுரவிக்கப்படுவார் என்றும் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.






இதுகுறித்துத் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், ’’1.5 ஏக்கர் நிலத்தை அரசுப் பள்ளிக்கு வழங்கிய "ஆயி என்ற பூரணம் அம்மாள்" அவர்களை வணங்குகிறேன்! போற்றுகிறேன்! மதுரை ஒத்தக்கடை கொடிக்குளம் நடுநிலைப் பள்ளியின் ஆசிரியப் பெருமக்கள் சார்பாகவும், அப்பள்ளியில் பயிலும் வருங்கால அறிஞர்கள் சார்பாகவும் பூரணம் அம்மாள் அவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்து, அவரின் செல்வ மகள் மறைந்த ஜனனி அவர்களின் சேவை மனப்பான்மையைப் போற்றுகிறேன்.


"அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல் ஆலயம் பதினாயிரம் நாட்டல் அன்னயாவினும் புண்ணியம் கோடி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்" எனும் பாரதியின் வரிகளுக்கு ஏற்ப வாழும் பூரணம் அம்மாள் அவர்களின் தொண்டு மகத்தானது! தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் அறிவுறுத்தலின்படி ஜனவரி 29-ஆம் தேதி மதுரையில் நடைபெறவிருக்கும் பெற்றோர் ஆசிரியர் கழக மண்டல மாநாட்டில் பூரணம் அம்மாள் அவர்கள் கௌரவிக்கப்பட உள்ளார்கள்’’ என்று பதிவிட்டுள்ளார். 


கொடை வள்ளல்கள் நிறைந்த மதுரை


சில மாதங்களுக்கு முன் மதுரை தத்தனேரியைச் சேர்ந்த வத்தல் வணிகர் இராமச்சந்திரன் திரு.வி.க. மாநகராட்சிப் பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்ட, ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் கொடுத்தது சமூக வலைதளங்களில் வைரலானது. தமிழறிஞர் சாலமன் பாப்பையா வெள்ளிவீதியார் பெண்கள் மாநகராட்சி பள்ளிக்கு கூடுதல் கட்டிடம் கட்ட 25 லட்ச ரூபாய் வழங்கியதும் நினைவுகூரத் தக்கது.