புதுச்சேரி: 


புதுச்சேரியில் 1 முதல் 8 வரையுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை.


மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை இந்தியா கூட்டணி பந்த் அறிவித்த நிலையில் விடுமுறை.


மின் கட்டண உயர்வு 


புதுச்சேரியில் ஆண்டுதோறும் மின்கட்டணம் ஏப்ரல் 1-ந்தேதி முதல் உயர்த்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான மின் கட்டண உயர்வு தொடர்பாக இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கடந்த ஜனவரி மாதம் பொதுமக்களிடம் கருத்து கேட்டது. ஆனால் நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் கட்டண உயர்வு அறிவிக்கப்பட தாமதமானது. இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் 16-ந்தேதி முதல் மின் கட்டணம் உயர்வு அமலுக்கு வந்தது. அதன்படி வீட்டு உபயோக மின்சாரத்துக்கு யூனிட்டுக்கு 40 காசுகள் முதல் 75 காசுகள் வரை உயர்த்தப்பட்டது.


பிரிபெய்டு திட்டத்தை கைவிட வேண்டும்


இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சியினரும், சமூக அமைப்புகளும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வருகின்றன. இந்த நிலையில் மின் கட்டண உயர்வினை ரத்து செய்ய வேண்டும், பிரிபெய்டு திட்டத்தை கைவிட வேண்டும், மின்துறையை தனியாரிடம் ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் 'இந்தியா' கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், தி.மு.க., ம.தி.மு.க., கம்யூனிஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் புதுச்சேரி மாநிலத்தில் நாளை புதன்கிழமை 'பந்த்' முழு கடையடைப்பு போராட்டம் நடைபெறும் என்று அறிவித்துள்ளது.


இந்த போராட்டம் புதுவை, காரைக்கால், மாகி மற்றும் ஏனாம் என 4 பிராந்தியங்களிலும் நடைபெற உள்ளது. இதற்காக இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் தனியார் பஸ் உரிமையாளர்கள், டெம்போ, ஆட்டோ மற்றும் கடை உரிமையாளர்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர்.


அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை 


தமிழக அரசு பேருந்துகள் புதுச்சேரி எல்லையில் நிறுத்தப்படும். இதே போல் கடைகளும் அடைக்கப்படுகிறது. தற்போது தனியார் பள்ளிகளில் காலாண்டு தேர்வுகள் நடைபெற்று வருகிறது. முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருப்பதால் புதுச்சேரியில் 1 ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை- முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு.


அனைத்து சேவையும் இயங்கும் - மாவட்ட ஆட்சியர் 


புதுச்சேரியில் சில அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் நாளை செப்டம்பர் 18, 2024 (புதன்கிழமை) அன்று பந்த் மற்றும் கடையடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளன. பொது மக்களுக்கும் மாணவர்களுக்கும் இடையூறு ஏற்படாத வகையில் சுகாதாரம், கல்வி மற்றும் போக்குவரத்து போன்ற அத்தியாவசிய சேவைகள் வழக்கம் போல் தொடர்ந்து செயல்படும். மாணவர்கள் எந்தவித கவலையும் இன்றி பள்ளிக்கு வருவதற்கு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அனைத்து அத்தியாவசிய சேவைகளும் வழக்கம்போல் இயங்கும் என தெரிவிக்கபடுகிறது. என மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் தெரிவித்துள்ளார்.