புதுச்சேரி : புதுச்சேரி: ‘நீட்’ அல்லாத நடப்பு 2026-27 ஆம் கல்வியாண்டிற்கான இளநிலை படிப்புகளுக்கு திருத்தப்பட்ட வரைவு தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Continues below advertisement

வரைவு தரவரிசை பட்டியல்

புதுச்சேரி மத்தியப் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகள் மற்றும் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான சென்டாக் (CENTAC) சேர்க்கை நடவடிவக்கைகள் விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளன. நடப்பு 2026-27 ஆம் கல்வியாண்டிற்கான 'நீட்' (NEET) தேர்வு அல்லாத பிற இளங்கலை மற்றும் தொழில்முறை படிப்புகளுக்கான திருத்தப்பட்ட வரைவு தரவரிசைப் பட்டியலை (Revised Draft Merit List) சென்டாக் நிர்வாகம் நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

இது குறித்து சென்டாக் ஒருங்கிணைப்பாளர் முத்துமீனா வெளியிட்டுள்ள விரிவான செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

Continues below advertisement

எந்தெந்த படிப்புகளுக்கு தரவரிசைப் பட்டியல்?

தற்போது வெளியாகியுள்ள திருத்தப்பட்ட வரைவு தரவரிசைப் பட்டியலானது பின்வரும் நீட் அல்லாத இளநிலை படிப்புகளுக்குப் பொருந்தும்:

தொழில்முறை படிப்புகள்: பி.வி.எஸ்.சி (கால்நடை மருத்துவம்), பி.எஸ்சி (விவசாயம் & தோட்டக்கலை), பி.பார்ம், பி.பி.டி, பி.எஸ்சி (துணை மருத்துவ படிப்புகள்) மற்றும் பி.டெக்.

சட்டப் படிப்புகள்: ஐந்து ஆண்டுகள் கொண்ட பி.ஏ., எல்.எல்.பி மற்றும் பிற சட்டப் படிப்புகள்.

டிப்ளமோ மற்றும் பிற படிப்புகள்: பி.வி.ஓ.சி (உயிரியல் சார்ந்த துணை மருத்துவ டிப்ளமோ படிப்புகள்) மற்றும் ஏ.என்.எம்.

பொது இளங்கலை படிப்புகள்: இளங்கலை கலை, அறிவியல் மற்றும் வணிகவியல் சார்ந்த பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., பி.பி.ஏ மற்றும் பி.சி.ஏ படிப்புகள்.

மாணவர்கள் இந்தத் தரவரிசைப் பட்டியலை சென்டாக்கின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.centacpuducherry.in என்ற முகவரியில் சென்று சரிபார்த்துக் கொள்ளலாம்.

ஆட்சேபனைகள் தெரிவிக்க வழிமுறை மற்றும் இறுதி நாள்:

விண்ணப்பதாரர்கள் தாங்கள் சமர்ப்பித்த விண்ணப்பங்களின் தற்போதைய சரிபார்ப்பு நிலையை (Verification Status), தங்களின் தனிப்பட்ட உள்நுழைவுப் பக்கத்தில் (Candidate Dashboard) அறிந்துகொள்ளலாம். வெளியாகியுள்ள இப்பட்டியலில் ஏதேனும் தவறுகளோ அல்லது ஆட்சேபனைகளோ (Objections) இருந்தால், மாணவர்கள் வரும் 27ஆம் தேதி காலை 11:00 மணிக்கு முன்பாக, தங்களது டேஷ்போர்டில் உள்நுழைந்து, அதில் உள்ள 'ஆட்சேபனைகள்' (Objections) என்ற லிங்க்கை கிளிக் செய்து தங்களது புகார்களைப் பதிவு செய்யலாம். இதுகுறித்த விழிப்புணர்வை மாணவர்களுக்கு ஏற்படுத்த, அவர்களின் பதிவுசெய்யப்பட்ட எண்களுக்குக் குறுஞ்செய்தியும் (SMS) அனுப்பப்பட்டுள்ளது.

பி.எஸ்சி நர்சிங் (B.Sc Nursing) சேர்க்கைக்கான முக்கிய வழிகாட்டுதல்கள்:

பி.எஸ்சி நர்சிங் படிப்பிற்கான சேர்க்கை முறைகள் குறித்து சென்டாக் தனி வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

1. அரசு ஒதுக்கீட்டு இடங்கள் (Government Quota)

புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த உள்நாட்டு மாணவர்களுக்கான பி.எஸ்சி நர்சிங் அரசு ஒதுக்கீட்டு இடங்கள், PNET-2026 (புதுச்சேரி நர்சிங் நுழைவுத் தேர்வு) மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே நிரப்பப்படும். இந்த நுழைவுத் தேர்வு நடந்து முடிந்த பிறகு, இதற்கான தனி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2. சுயநிதி மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர் (NRI) இடங்கள்

புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி, காரைக்கால் மற்றும் மாகி அன்னை தெரசா முதுகலை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றில் உள்ள பி.எஸ்சி நர்சிங் சுயநிதி இடங்கள் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான (NRI) இடங்கள் அனைத்தும் 'நீட்' (NEET) தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மட்டுமே நிரப்பப்படும்.

மதிப்பெண் சமர்ப்பிக்க அவகாசம்:

நர்சிங் நுழைவுத்தேர்வு (PNET) நடத்தி முடிக்கப்பட்ட பின், தேர்வர்கள் தங்களது நுழைவுத் தேர்வு மதிப்பெண்களை இணையதளத்தில் சமர்ப்பிப்பதற்குப் போதிய கால அவகாசம் வழங்கப்படும் என்றும் சென்டாக் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு வீரர்களுக்கான பட்டியல் & உதவி எண்கள்:

விளையாட்டுப் பிரிவின் கீழ் விண்ணப்பித்துள்ள (Sports Quota) மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் மிக விரைவில் தனியாக வெளியிடப்படும். மாணவர்கள் கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் தங்களின் சந்தேகங்களைத் தீர்த்துக்கொள்ள சென்டாக் இணையதளத்தைப் பார்க்கலாம் அல்லது தங்களின் டேஷ்போர்டில் உள்ள 'குறைகள்' (Grievances) பகுதி மூலம் கேள்விகளை எழுப்பலாம். மேலும் அவசரத் தேவைகளுக்கு 0413-2655570, 2655571 ஆகிய உதவி எண்களைத் தொடர்பு கொண்டு விளக்கம் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.