புதுச்சேரி: புதுச்சேரியில் பி.டெக்., பி.பார்ம்., விவசாயம் (அக்ரி) மற்றும் கலை, அறிவியல் உள்ளிட்ட ‘நீட்’ அல்லாத படிப்புகளுக்கான தற்காலிக வரைவு மெரிட் பட்டியலை (Draft Merit List) சென்டாக் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.
புதுச்சேரி சென்டாக்: 'நீட்' அல்லாத படிப்புகளுக்கான வரைவு மெரிட் லிஸ்ட் வெளியீடு!
விண்ணப்பங்கள் குவிந்தன!
சென்டாக் மூலம் நடத்தப்படும் ‘நீட்’ அல்லாத தொழில்முறை படிப்புகள் மற்றும் கலை, அறிவியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பதிவு கடந்த 3-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்த ஆண்டு மாணவர்களிடையே இதற்கு பலத்த வரவேற்பு காணப்பட்டது. மொத்தமாக 12,288 விண்ணப்பங்கள் சென்டாக்கிற்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. இதில் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் மட்டும் 10,540 பேர் விண்ணப்பித்துள்ளனர். மேலும், பிராந்திய ஒதுக்கீட்டிற்கு (Regional Reservation) 1,518 பேரும், கிராமப்புற ஒதுக்கீட்டிற்கு (Rural Reservation) 776 பேரும் விண்ணப்பித்துள்ளனர். ஜே.இ.இ. (JEE) தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பி.டெக் சேர 1,810 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர்.
முழுவீச்சில் நடந்த சான்றிதழ் சரிபார்ப்பு
விண்ணப்பப் பதிவு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, மாணவர்களின் மதிப்பெண்கள் மற்றும் சாதி, இருப்பிடச் சான்றிதழ்களைச் சரிபார்க்கும் பணியில் சென்டாக் நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வந்தது. இப்பணிகள் அனைத்தும் முழுமையாக முடிவடைந்த நிலையில், தற்போது தற்காலிக வரைவு மெரிட் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
படிப்புகள் வாரியாக மெரிட் பட்டியலில் இடம் பெற்றவர்கள் விபரம்:
கலை மற்றும் அறிவியல் படிப்புகள்: பி.ஏ., பி.எஸ்சி., பி.காம்., பி.பி.ஏ., பி.சி.ஏ. உள்ளிட்ட கலை, அறிவியல் மற்றும் வணிகவியல் படிப்புகளுக்கான மெரிட் பட்டியலில் மொத்தம் 5,726 பேர் இடம் பிடித்துள்ளனர்.
பி.டெக். படிப்பு: பொறியியல் படிப்புகளுக்கு இந்த ஆண்டு கடும் போட்டி நிலவுகிறது. வரைவு மெரிட் பட்டியலில் புதுச்சேரியைச் சேர்ந்த 4,789 மாணவர்களும், வெளி மாநிலங்களைச் சேர்ந்த 695 மாணவர்களும் இடம் பெற்றுள்ளனர்.
பி.பார்ம். படிப்பு: பார்மசி படிப்பிற்கான பட்டியலில் புதுச்சேரியில் இருந்து 3,210 பேரும், பிற மாநிலங்களில் இருந்து 697 பேரும், என்.ஆர்.ஐ. (NRI) பிரிவில் 7 பேரும் இடம் பெற்று உயர்கல்வி வாய்ப்பிற்காகக் காத்திருக்கின்றனர்.
ஐந்தாண்டு சட்டப்படிப்பு (B.A. LL.B): இப் படிப்பிற்கு புதுச்சேரி மாணவர்கள் 1,046 பேரும், பிற மாநில மாணவர்கள் 330 பேரும் மெரிட் பட்டியலில் தேர்வாகியுள்ளனர்.
இதுமட்டுமன்றி பி.வி.எஸ்சி. (கால்நடை மருத்துவம்), பி.பி.டி. (பிசியோதெரபி), பி.எஸ்சி. பாராமெடிக்கல் மற்றும் டி.ஏ.என்.எம். போன்ற மருத்துவச் சார்பு படிப்புகளுக்கும் வரைவு மெரிட் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
ஆட்சேபனை தெரிவிக்க வாய்ப்பு
தற்போது வெளியாகியுள்ள மெரிட் பட்டியலில் ஏதேனும் திருத்தங்களோ அல்லது ஆட்சேபனைகளோ (Objections) இருந்தால், மாணவர்கள் தங்களின் சென்டாக் லாகின் (Dashboard) பக்கத்தின் வாயிலாக வரும் 20-ஆம் தேதி காலை 11:00 மணிக்குள் தங்களின் புகார்களைப் பதிவு செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நர்சிங் (Nursing) படிப்புகளுக்கான மெரிட் பட்டியல் தனியாகப் பின்னர் வெளியிடப்படும் என்றும் சென்டாக் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.
