புதுமைப் பெண் திட்ட விரிவாக்கம் தொடக்க விழாவில் மாணவிகளின் கல்விக்கு எந்தத் தடை வந்தாலும் உடைப்பேன் என்று முதல்வர் ஸ்டாலின் சூளுரைத்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், காமராஜ் கல்லூரியில் நடைபெற்ற அரசு விழாவில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு உயர்கல்வி உறுதித் திட்டத்தின் கீழ், அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயின்று உயர் கல்வியில் சேரும் மாணவிகளுக்கும் இனி மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தின் விரிவாக்கத்தை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். வங்கி பற்று அட்டைகள் வழங்கி, விழாவில் பேசினார்.
அப்போது அவர் கூறும்போது, ''இங்குள்ள மாணவிகளைப் பார்த்து, Dravidian Stock ஆகப் பெருமைப்படுகிறேன். இதற்கு நேர் எதிராக பெண்கள் வளர்ச்சி பிடிக்காமல், வன்மம் பிடித்த Stock ஒன்று உள்ளது. பெண்கள் இன்றும் வீட்டில்தான் இருக்க வேண்டும் எனப் பேசும் எக்ஸ்பயரியான ஸ்டாக் அது.
செலவு அதிகம் என்று பார்க்கவில்லை
இந்தத் திட்டத்தால் செலவு அதிகம் என்று பார்க்கவில்லை. தந்தைக்குரிய செயலாகத்தான் பார்க்கிறேன். மாணவிகளின் கல்விக்கு எந்தத் தடை வந்தாலும் அதை உடைப்பேன்.
மதிப்பெண்கள் வாங்குவதில் இந்தியாவிலேயே தமிழக பெண்கள்தான் முதன்மையாக உள்ளனர். நாட்டிலேயே உயர் கல்வியில் சேர்வதிலும் தமிழக மாணவிகள்தான் டாப். வேலைக்குச் செல்வதிலும் அவர்கள்தான் டாப். இதைத்தான் தந்தை பெரியார் நினைத்தார்'' என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.