மேல்நிலைத் தேர்வு தனித்தேர்வர்களால் உரிமை கோரப்படாத அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் அழிக்கப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Continues below advertisement

இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்து உள்ளதாவது:

அரசுத் தேர்வுகள் துறையால் நடத்தப்பட்ட மார்ச் 2014 முதல் செப்டம்பர் 2018 வரையிலான அனைத்து பருவங்களுக்கு உரிய (மார்ச் / ஜூன் / செப்டம்பர்) மேல்நிலைப் பொதுத் தேர்வெழுதிய தனித்தேர்வர்களின் அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் இதுநாள் வரை தனித்தேர்வர்களால் உரிமைக்கோரப்படாமல் அரசுத்தேர்வுகள் இயக்ககத்தில் உள்ளன.

இவ்வாறு பெருமளவில் உள்ள உரிமை கோரப்படாத தனித்தேர்வர்களின் மேல்நிலை மதிப்பெண் (Unclaimed Higher Secondary Certificates of Private Candidates) உடனடியாக அழித்திட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விவரத்தினை தமிழ்நாடு அரசிதழ் வெளியீட்டு எண்.34 நாள் 27.08.2025 அன்று பொது அறிவிக்கையாக வெளியிடப்பட்டுள்ளது.

Continues below advertisement

எனினும், உரிமை கோராத தனித் தேர்வர்களின் நலனைக் கருத்தில் கொண்டு, இச்செய்திக் குறிப்பு வெளியிடப்பட்ட நாளிலிருந்து மூன்று (3) மாத காலம் இறுதி அவகாசமாக வழங்கப்பட உள்ளது. தேர்வர்களுக்கு 10.01.2026 வரை அவகாசம் அளிக்கப்பட்டு, அதன் பின்னர் அம்மதிப்பெண் சான்றிதழ்கள் எவ்வித அறிவிப்புமின்றி அழிக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது.

பெறுவது எப்படி?

இந்த இடைப்பட்ட காலத்தில் உரிமை கோரப்படாத சான்றிதழ்களுக்கான தனித்தேர்வர்கள் இவ்வலுவலகத்தை உரிய ஆளறிச் சான்றுடன் நேரில் அணுகியோ அல்லது கீழ்க்கண்ட அலுவலருக்கு உரிய அத்தாட்சியுடன் (நுழைவுச்சீட்டு) ரூ.45/-க்கான அஞ்சல் தலை ஒட்டப்பட்ட சுயமுகவரியிட்ட உறையுடன் விண்ணப்பித்து அவர்தம் மதிப்பெண் சான்றிதழினைப் பெற்று கொள்ள வேண்டுமெனவும் அறிவிக்கப்படுகிறது.

அழிக்கப்படவுள்ள மதிப்பெண் சான்றிதழ்கள்

மார்ச் 2014 முதல் செப்டம்பர் 2018 வரை (மார்ச் / ஜூன் / செப்டம்பர்)

உரிமை கோரி பெற்றுக்கொள்ள அணுக வேண்டிய அலுவலர்

துணை இயக்குநர் (மேல்நிலை),

அரசுத் தேர்வுகள் இயக்ககம்,

பேராசிரியர் அன்பழகன் கல்வி வளாகம்,

கல்லூரிச் சாலை, நுங்கம்பாக்கம், சென்னை-6.

இவ்வறிவிக்கை மேற்காண் பருவங்களில் தனித்தேர்வர்களாக தேர்வெழுதியவர்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.