தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ளது ரெட்டியார்பட்டி கிராமம். இக்கிராமத்தில் இயங்கி வரும் கிராம கமிட்டி அரசு உதவி பெறும்  மேல்நிலைப்பள்ளியில் சுமார் 2460 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த சூழலில் இப்பள்ளியைச் சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட ஒன்பதாம் வகுப்பு மற்றும் பதினோராம் வகுப்பு  மாணவர்கள் கடந்த ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி பிரதம மந்திரியின் யாசவி எனும் தகுதி தேர்வு எழுதுவதற்கு பயிற்சி பெற்று விருதுநகர், சிவகாசி, மதுரை, திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று தேர்வு எழுதியுள்ளனர். தேர்வு எழுதிய மாணவர்களில் பதினோராம் வகுப்பு மாணவர்களில் 15 பேரும் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களில் ஒன்பது பேரும் என மொத்தம் 24 மாணவ, மாணவிகள் அதே ஆண்டு நவம்பர் 25ஆம் தேதி வெளியிடப்பட்ட தகுதி தேர்வு முடிவில் வெற்றி பெற்றனர்.





தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களில் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டிற்கு 75 ஆயிரம் ரூபாயும், பதினோராம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டிற்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாயும் பிரதம மந்திரியின் யாசவி மூலம் அவரவர்கள் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். ஆனால் தேர்வில் வெற்றி பெற்று கடந்த ஒரு ஆண்டு முழுமையாக முடிந்தும் தங்களுக்கு இன்னும் உதவித்தொகைகள் கிடைக்கவில்லை என வேதனை தெரிகின்றனர். மேலும் தங்கள் பள்ளிக்கு அருகில் இருக்கும் மற்ற பள்ளிகளில் இதே போன்று தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு உதவித்தொகை கிடைக்கப்பெற்றுள்ளது. தங்கள் பள்ளிக்கு மட்டும் ஏன் இன்னும் கிடைக்கவில்லை எனவும் தெரியவில்லை.  நாங்கள் அனைவரும் நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர்கள். தேர்வு எழுதச்செல்லும் போது கூட கடன் பெற்று கொண்டு தான் எங்களது பெற்றோர் எங்களை அந்த பணத்தில் அனுப்பி வைத்தனர், எனவே அப்பணம் விரைவாக கிடைத்தால் மிகுந்த பயனாக இருக்கும் எனவும், மேல் படிப்பு செல்வதற்கும்  தங்களுக்கு பிரதம மந்திரியின் கல்வி உதவித் தொகை கிடைத்தால் பயன்படும். அதோடு கல்வித்தரத்தை மேலும் உயர்த்திக் கொள்ள பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்தனர் தேர்ச்சி பெற்ற மாணவ மாணவியர். எனவே அரசு இதில் முனைப்பு காட்டி தங்களுக்கு கொடுக்க வேண்டிய உதவித்தொகை பணத்தை கொடுக்க அரசு முன் வர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.




இதுகுறித்து அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கூறும் பொழுது, “எங்களது பள்ளியில் இருந்து 2022-2023 ஆண்டில் 50 மாணவர்கள்  பிரதம மந்திரியின் யாசவி திட்டத்தின் படி தேர்வு எழுதினர். அதில் தேர்வு எழுதிய மொத்தம் 24 பேர் தேர்ச்சி பெற்றனர். அதற்கு ஒரு தொகை நிர்ணயிக்கப்பட்டது. அதனை கருத்தில் கொண்டு எங்களது மாணவர்கள் ஒரு கனவோடு படித்தனர். குறிப்பாக இரண்டு மாதமாக பயிற்சி எடுத்து பணம் செலவு செய்து சென்று தேர்வு எழுதினர், இக்கிராமத்தில் உள்ள மாணவர்கள் ஏழை எளியவர்கள் என்பதால் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் கனவுகளோடு சென்று தேர்வு எழுதினர். ஆனால் எங்கள் பள்ளி மாணவர்களுக்கு இதுவரை அந்த பணம் வரவில்லை. அது விரைவாக கிடைத்தால் எங்களது மாணவர்களின் மேல் படிப்பிற்கு உதவியாக இருக்கும்” எனத் தெரிவித்தார்,