சென்னை கல்லூரி மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில், மாநிலக் கல்லூரி மாணவர் சுந்தர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த நிலையில், மோதலைத் தடுக்க வேண்டி கல்லூரி நிர்வாகம் 6 நாட்கள் விடுமுறை அறிவித்துள்ளது. எனினும் மாநிலக் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


பச்சையப்பன் கல்லூரி- மாநிலக் கல்லூரி மாணவர்கள் மோதல்


சென்னை கலைக் கல்லூரி மாணவர்கள் மத்தியில் பேருந்து, ரயில் பயணங்களில் ரூட்டு தல விவகாரத்தில் அடிக்கடி மோதல், சண்டை நிகழ்கிறது. இந்த வகையில், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வாசலில் கடந்த 4ஆம் தேதி மோதல் நடந்தது. இதில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களால் தாக்கப்பட்ட, மாநிலக் கல்லூரி மாணவர் சுந்தர் கடுமையாகப் பாதிக்கப்பட்டார்.


இதில் 4ஆம் தேதியே சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சுந்தர் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சைப் பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார். இதுதொடர்பாக பச்சையப்பன் கல்லூரி மாணவர்களான திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த சந்துரு, யுவராஜ், ஈஸ்வர், ஹரி பிரசாத், கமலேஸ்வரன் ஆகியோரை பெரியமேடு போலீஸார் ஏற்கெனவே கைது செய்தனர்.


5 மாணவர்களும் புழல் சிறையில் அடைப்பு


விசாரணைக்குப் பிறகு அல்லிக்குளம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி, அக்டோபர் 18ஆம் தேதி வரை 5 பேரையும் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி போலீஸார் 5 பேரையும் புழல் சிறையில் அடைத்தனர். சுந்தர் உயிரிழந்ததை அடுத்து, வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.


இந்த நிலையில் பெரிய அளவில் போராட்டத்தைத் தவிர்க்கவும் அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையிலும் மாநிலக் கல்லூரி நிர்வாகம் 6 நாட்கள் விடுமுறையை அறிவித்துள்ளது.


6 நாட்கள் விடுமுறை


ஆயுத பூஜை விடுமுறையோடு இந்த விடுமுறையை அறிவித்துள்ள நிர்வாகம், செவ்வாய்க் கிழமை அன்று மீண்டும் கல்லூரி திறக்கப்படும் என்று அறிவித்துள்ளது.


அதேபோல பச்சையப்பன் கல்லூரி, மாநிலக் கல்லூரிகளில் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர். அதேபோல மின்சார ரயில் வழித்தடத்திலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


உள்ளிருப்புப் போராட்டம்


இந்த நிலையில் சுந்தரின் மரணத்துக்கு நீதி கேட்டு, மாநிலக் கல்லூரி மாணவர்களில் 100-க்கும் மேற்பட்டோர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.