சென்னை மாநிலக் கல்லூரியில் காது கேளாதோருக்கு பிரத்யேகமாக முதுகலைப் படிப்பு இந்தக் கல்வியாண்டு முதல் (2022- 23) தொடங்கப்பட்டுள்ளது.

 

தமிழ்நாட்டில் பழமையான கல்லூரிகளில் ஒன்றாக சென்னை காமராஜர் சாலையில் உள்ள மாநில கல்லூரி இருந்து வருகிறது. இந்த கல்லூரியில் காது கேளாதோருக்கான படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. 

 

அந்த வகையில் இளங்கலை பட்டப் படிப்புகளில் பி.காம்., பி.சி.ஏ.-வில் இவர்களுக்கு என்று தனியாக மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இந்த நிலையில் இளங்கலை முடித்து, முதுகலை படிப்பை தொடருவதற்கு ஏதுவாக எம்.காம். படிப்பு தொடங்க உயர் கல்வித்துறை அனுமதித்து இருக்கிறது. 

 

அதன்படி, சென்னை மாநில கல்லூரியில்  எம்.காம். படிப்பு தொடங்கப்பட உள்ளது. 50 இடங்களுடன் இந்த படிப்பை தொடங்க கல்லூரி திட்டமிட்டு இருக்கிறது. அரசிடம் முறையான அறிவிப்பு வந்ததும், நடப்பு கல்வியாண்டிலேயே (2022-23) இந்த படிப்பு அறிமுகம் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 


 

 

 


பொறியியல் கலந்தாய்வு அப்டேட்

 

இன்ஜினியரிங் படிப்புக்கான பொது கலந்தாய்வும், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வும் 'நீட்' தேர்வு முடிவுக்காக தள்ளிவைக்கப்பட்டு, கடந்த 10ம் தேதி தொடங்கியது. 4 சுற்றுகளாக ஆன்லைனில் இந்த கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.



 

பொது பிரிவினருக்கான முதல் சுற்று கலந்தாய்வுக்கு தரவரிசையில் இடம்பெற்றிருந்த முதல் 14 ஆயிரத்து 546 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அதேபோல், 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டு முதல் சுற்று கலந்தாய்வுக்கு அதற்கான தரவரிசையில் முதல் 334 பேர் அழைக்கப்பட்டு இருந்தனர். 

 

இந்த கலந்தாய்வில் விருப்ப இடங்களை தேர்வு செய்தல், தற்காலிக ஒதுக்கீடு வழங்குதல், அதனை உறுதி செய்தல், பின்னர் இறுதி ஒதுக்கீட்டு ஆணை பெறுதல் அல்லது வாய்ப்பு இருந்தால் விருப்ப இடங்கள் கிடைப்பதற்கு 7 நாட்கள் காத்திருத்தல் ஆகிய நடைமுறைகளின்படி இடங்கள் மாணவ-மாணவிகளுக்கு ஒதுக்கப்படுகின்றன.

 

அந்த வகையில், பொதுப்பிரிவு மற்றும் 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு நடைமுறையில் இடங்களை தேர்வு செய்தல், உறுதி செய்தல், ஒதுக்கீட்டு ஆணை பெறுதல் ஆகிய நடைமுறைகள் முடிந்துள்ள நிலையில், கலந்தாய்வில் கலந்து கொள்ள அழைக்கப்பட்ட 14 ஆயிரத்து 546 பேரில், 11ஆயிரத்து 626 பேர் மட்டுமே இடங்களை உறுதி செய்திருக்கின்றனர். 

 

இந்த 11ஆயிரத்து 626 பேரில், 5 ஆயிரத்து 233 பேருக்கு விருப்பம் தெரிவித்த இடங்கள் கிடைத்து, அந்தந்த கல்லூரிகளில் சேர்க்கைக்கான நடைமுறைகளை தொடங்கி இருக்கின்றனர். அதற்காக 7 நாட்கள் அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. 4 ஆயிரத்து 269 பேர், தேர்வு செய்திருந்த விருப்ப இடங்களில் முதன்மை விருப்ப இடங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புக்கு காத்திருக்கின்றனர்.
  

 

இந்த நடைமுறை இந்த ஆண்டு முதல் கொண்டுவரப்பட்டு இருக்கிறது. அவ்வாறு தேர்வு செய்திருக்கும் மாணவர், ஏற்கனவே ஒதுக்கீடு பெற்ற கல்லூரிக்கான இடத்துக்கு கட்டணத்தை செலுத்திவிடவேண்டும். இடைபட்ட 7 நாட்கள் அவகாசத்தில், இடங்களை உறுதிசெய்து கல்லூரியில் சேர்க்கை நடைமுறையில் இருப்பவர்களில் யாரும் சேரவில்லை என்றால், அந்த இடங்கள் காத்திருக்கும் மாணவர்களின் முதன்மை விருப்ப இடங்களாக இருக்கும் பட்சத்தில் அந்த இடத்தில் இந்த மாணவர்கள் கலந்தாய்வு விதிகளின்படி மாறி சேர்ந்து கொள்ள முடியும். 

 

இதேபோல், அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வில், அழைக்கப்பட்ட 334 பேரில், 252 பேர் இடங்களை தேர்வு செய்திருக்கின்றனர். இவர்களில் 185 பேர் மாணவர் சேர்க்கைக்கான நடைமுறையை தொடங்கியுள்ளனர். மீதமுள்ள 67 பேர் முதன்மை விருப்ப இடங்கள் கிடைப்பதற்கான வாய்ப்புக்கு காத்திருக்கின்றனர். அந்த வகையில் முதல் சுற்றுக்கான கலந்தாய்வு வருகிற 25ம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. அன்றைய தினமே 2வது சுற்றுக்கான கலந்தாய்வும் தொடங்கி நடைபெற இருக்கிறது.