2023- 2024ஆம் ஆண்டிற்கு பெண் கல்வி ஊக்குவிப்புத் திட்டம், ப்ரிமெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டம், போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டம் மற்றுமே சுகாதாரமற்ற தொழில் புரிவோரின் குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகை திட்டம் ஆகியவற்றுக்கு இனி இணைய வழியில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.


அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை பயிலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவிகளுக்கு பெண்கல்வி ஊக்குவிப்புத் தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் 3 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.50/- வீதம் 10 மாதங்களுக்கு ரூ.500/-ம், 6ஆம் வகுப்பு பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.100/- வீதம் 10 மாதங்களுக்கு ரூ.1000/-ம், 7 முதல் 8ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு மாதம் ரூ.150/- வீதம் 10 மாதங்களுக்கு ரூ.1500/-ம் வழங்கப்பட்டு வருகிறது.


மேலும் ஆதிதிராவிடர் நலத்துறையால் பள்ளிகள் அளவில் 9 மற்றும் 10ஆம் வகுப்பு பயிலும் ஆதிதிராவிடர் மாணாக்கர்களுக்கு ப்ரிமெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம், 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கான போஸ்ட்மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் 1 முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களில் பெற்றோர்கள் யாரேனும் சுகாதாரக் கேடு விளைவிக்கும் தொழில் புரிவோராக இருப்பின் அம்மாணாக்கர்களுக்கான சுகாதார தொழில் புரிவோரின் குழந்தைகளுக்கான ப்ரிமெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டமும் இன வேறுபாடின்றியும், வருமான கணக்கின்றியும் செயல்படுத்தப்படுகிறது.


2023-2024ஆம் கல்வியாண்டு முதல் பெண்கல்வி ஊக்குவிப்புத் தொகை திட்டம், ப்ரிமெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம், போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை திட்டம், சுதாரமற்ற தொழில் புரிவோரின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை திட்டம் ஆகிய திட்டங்கள் ஒருங்கிணைந்த கல்வி உதவித்தொகை திட்டத்திற்கான புதிய இணைய தளத்தில் செயல்படுத்தப்பட உள்ளது. 


எனவே மேற்கண்ட கல்வி உதவித்தொகை திட்டங்களின் கீழ் மாணாக்கர்கள் விண்ணப்பிக்க கீழ்க்கண்ட அறிவுரைகளை அனைத்து பள்ளிகளும் தவறாமல் பின்பற்ற வேண்டும், 


 1) அனைத்துத் திட்டங்களுக்கும் விண்ணப்பிக்க ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே மாணவரின் ஆதார் எண்ணுடன் ஏதேனும் தொலைபேசி எண் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.


2) ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கி கணக்கிற்கே கல்வி உதவித்தொகை விடுவிக்கப்படும் என்பதால் ஆதார் எண்ணுடன் வங்கி கணக்கினை இணைக்கவும். தேவையான நேர்வுகளில் இந்திய அஞ்சல் துறையால் நடத்தப்படும் முகாம் மூலம் அஞ்சலக வங்கியில் (India Portal Payment Bank) புதிய கணக்கினை தொடங்கவும் அனைத்து பள்ளிகளும் நடடிக்கை மேற்கொள்ள வேண்டும். 


3) இளஞ்சிறார் மாணாக்கர்கள் வங்கி கணக்கு பெற்றோர் பெயருடன் இணைந்த வங்கி கணக்காக (Joint Account) இருந்தாலும் அந்த வங்கி கணக்கு, மாணவரின் ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட வேண்டும்.


4) மாணாக்கர்களுக்கு ஆதார் எண்ணை வங்கி கணக்குடன் இணைக்க ஏதுவாக அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சியர் தலைமையில், முதன்மை வங்கி மேலாளர்கள், முதன்மை கல்வி அலுவலர்கள், வட்டாரக் கல்வி அலுவலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் / தனித்த அலுவலர்களுடன் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.


இவ்வாறு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.