ஏஐசிடிஇ சார்பில் வழங்கப்படும் பிரகதி என்ற உதவித்தொகை திட்டத்தின்கீழ் கல்லூரி மாணவிகளுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. பெண் கல்வியை ஊக்குவிக்கும் நோக்கில், ஆண்டுதோறும் 4 ஆயிரம் பேருக்கு ரூ.50 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டும் 800 மாணவிகளுக்கு பிரகதி உதவித் தொகை அளிக்கப்படுகிறது.


இந்த நிலையில் 2024- 25ஆம் ஆண்டு பிரகதி கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்க நாளை (நவம்பர் 30) கடைசித் தேதி என்று ஏஐசிடிஇ தெரிவித்துள்ளது. 


யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?


இந்த கல்வி உதவித்தொகைக்கு பொறியியல் முதல் ஆண்டு மாணவிகளும், டிப்ளமோ முடித்துவிட்டு நேரடியாக இரண்டாம் ஆண்டில் சேர்ந்து படித்துக் கொண்டிருக்கும் பொறியியல் மாணவிகளும் விண்ணப்பிக்கலாம்.


என்ன தகுதி?


* பிரகதி கல்வி உதவித் தொகையைப் பெற 10, 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் கணக்கில் கொள்ளப்படும்.


* ரூ.8 லட்சத்துக்கும் குறைவான குடும்ப ஆண்டு வருமானம் உள்ள மாணவிகள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்க முடியும்.


* திருமணத்துக்குப் பிறகு படித்துக் கொண்டிருக்கும் மாணவிகளும் இதற்கு விண்ணப்பிக்கலாம். 


* பிரகதி உதவித்தொகைக்குப் புதிதாக விண்ணப்பிப்பவர் மட்டுமல்லாமல், ஏற்கெனவே இந்தத் திட்டத்தின்கீழ் கல்வி உதவித்தொகை பெற்றவர்களும் விண்ணப்பங்களைப் புதுப்பித்து, விண்ணப்பிக்கலாம்.


இட ஒதுக்கீடு எப்படி?


உதவித் தொகையை வழங்குவதில் அரசு ஏற்கெனவே பின்பற்றும் இட ஒதுக்கீடு பின்பற்றப்படுகிறது. அதாவது எஸ்சி மாணவிகளுக்கு 15 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதேபோல, எஸ்டி மாணவிகளுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீடும், ஓபிசி மாணவிகளுக்கு 27 சதவீதம் இட ஒதுக்கீடும் பின்பற்றப்படும் என்று உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.


விண்ணப்பிக்கத் தேவையான ஆவணங்கள் என்ன?


* பத்தாம் வகுப்பு, 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள்
* மாணவியின் ஆதார் எண்
* வருமானச் சான்றிதழ்
* கல்விக் கட்டண நகல்
* சாதிச் சான்றிதழ்


பிரகதி கல்வி உதவித்தொகை குறித்த விரிவான விவரங்களை அறிய: https://scholarships.gov.in/public/schemeGuidelines/AICTE/AICTE_2010_G.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


கூடுதல் தகவல்களுக்கு: https://scholarships.gov.in/


இதையும் வாசிக்கலாம்: AICTE Scholarship: கல்லூரி மாணவர்களே.. ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் உதவிக்கொகை; அள்ளித்தரும் அரசு- விண்ணப்பிப்பது எப்படி?