புதுச்சேரி: அரசு இட ஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்க இடம் கிடைத்த அரசு பள்ளி மாணவர் கூடுதல் கட்டணம் செலுத்த முடியாமல் தவித்து வருகிறார்.

புதுச்சேரி: அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் 10% சிறப்பு இடஒதுக்கீட்டின் கீழ் தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்ற ராஜகுரு என்ற மாணவர், கூடுதல் கட்டண செலவினை சமாளிக்க முடியாமல் நிதிநெருக்கடியில் சிக்கியுள்ளார்.

கரிக்கலாம்பாக்கத்தைச் சேர்ந்த அய்யனார் - அஞ்சலை தம்பதிகளின் மகனான ராஜகுரு, அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 வரை பயின்று, NEET தேர்வில் 187 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இதனை தொடர்ந்து, புதுச்சேரி அரசின் இடஒதுக்கீட்டின் மூலம் தனியார் மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்றுள்ளார்.

ராஜகுருவின் கல்விக்கட்டணமாக அரசு ரூ.4 லட்சம் வழங்கினாலும், மேலதிகமாக புத்தக கட்டணம், கிளினிக்கல் கட்டணம், சீருடை, பஸ் கட்டணம், PG கோச்சிங் கட்டணம் எனக் குறைந்தது ரூ.2 லட்சம் வரை செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையை திரட்ட முடியாமல், அவர் மருத்துவக் கனவை நிஜமாக்க அலைந்து திரிகிறார்.

ராஜகுருவின் தாய் மரணமடைந்த நிலையில், உடல் ஊனமுற்ற தந்தை அய்யனார் எந்தவிதமான வருமானமும் இல்லாமல் வீட்டிலேயே தங்கியிருக்கிறார். தற்போது தனது பாட்டியின் பராமரிப்பில் வளர்ந்து வரும் ராஜகுருவிற்கு, கல்வியை தொடரும் நிலை பெரிதும் கடினமாகியுள்ளது.

இந்த நிலையில், மாணவரின் மருத்துவ சீருடை செலவினை சென்டாக் மாணவர் பெற்றோர் நலச்சங்கம் ஏற்றுக் கொண்டுள்ளது. மேலும், சங்கத்தின் நிர்வாகிகள் அவரை நேரில் சந்தித்து, மனதை தளர விடாமல் உற்சாகம் வழங்கியுள்ளனர்.

மாணவரின் இவ்விதமான சூழ்நிலை அறிந்து, அவரது கனவை நிஜமாக்க நன்கொடையளிக்க விரும்பும் தன்னார்வலர்கள் முன்வர வேண்டும் என சங்க தலைவர் நாராயணசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புக்கு மாணவர் ராஜகுரு மொபைல் எண்: 90430 2677