தொகுப்பூதியத்தில் ஏற்கனவே பணியாற்றி வந்த கவுரவ விரிவுரையாளர்களை இனி பணியமர்த்த வேண்டாம் என்று அனைத்து அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கும், தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அண்மையில் 1,024 நிரந்தர பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்கள் நிரப்பப்பட்டதை அடுத்து, இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 51 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள், 3 இணைப்புக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கல்லூரிகளில் 1,060 விரிவுரையாளர் பணியிடங்கள் காலியாக இருந்தன. காலியாக உள்ள பணியிடங்களால் கற்பித்தல் பணி பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, அந்தந்த பாலிடெக்னிக் கல்லூரிகளே தொகுப்பூதியத்தில் தற்காலிகமாக கவுரவ விரிவுரையாளர்களைப் பணியமர்த்தி கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, அனைத்து கல்லூரிகளும் தங்களின் கல்வி வளாகங்களில் கவுரவ விரிவுரையாளர்களைப் பணியமர்த்தி, கற்றல் - கற்பித்தலை நடத்தி வந்தன. எனினும் இந்தப் பதவிகளுக்கு நிரந்தரமாகப் பேராசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.
இந்த நிலையில் 2017-2018 ஆம் ஆண்டிற்கான அரசு பல் தொழில்நுட்பக் கல்லூரிகளில் 1060 விரிவுரையாளர் காலிப் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் பணித்தெரிவு செய்வது சார்ந்து ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அறிவிக்கை 27.11.2019 அன்று வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு, கணினி வழித் தேர்வுகள் 08.12.2021 முதல் 13.12.2021 வரை நடத்தப்பட்டு, தேர்வு முடிவுகள் 08.03.2022 அன்று ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டன.
11.03.2022 நாளிட்ட ஆசிரியர் தேர்வு வாரிய பத்திரிக்கை செய்தியில், பணிநாடுநர்கள் தங்களது கல்வித் தகுதி மற்றும் பணி அனுபவம் தொடர்பான கூடுதல் சான்றிதழ்களை/ ஆவணங்களை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் வழியாக 11.03.2022 முதல் 01.04.2022 வரை பதிவேற்றம் செய்தனர்.
பணிநாடுநர்கள் விண்ணப்பத்துடன் பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்கள், ஆவணங்கள் மற்றும் கூடுதலாக பதிவேற்றம் செய்யப்பட்ட சான்றிதழ்கள்/ ஆவணங்களின் அடிப்படையில் பணிநாடுநர்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டன. அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள 15 பாடப் பிரிவுகளுக்கு 1:2 என்ற விகிதாச்சாரப்படி சான்றிதழ் சரிபார்ப்பிற்கான பட்டியல் தயார் செய்யப்பட்டு, ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
தொடர்ந்து சான்றிதழ் சரிபார்ப்பு நடந்த நிலையில் கணிதம், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், மின்னணு பொறியியல், எலக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், சிவில், கணினி அறிவியல் உள்ளிட்ட 10 பிரிவுகளில் தேர்வு செய்யப்பட்ட விரிவுரையாளர்களின் பட்டியலை டிஆர்பி எனப்படும் ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.
இதையடுத்து, 1,024 நிரந்தர பாலிடெக்னிக் விரிவுரையாளர் பணியிடங்களுக்குத் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கான பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த 28ஆம் தேதி அன்று வழங்கினார்.
கல்லூரிகளில் காலியாக இருந்த பணியிடங்கள் தற்போது நிரந்தரமாக நிரப்பப்பட்டுள்ளதால், ஏற்கனவே தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் கவுரவ விரிவுரையாளர்களை இன்று முதல் பணியமர்த்த வேண்டாம் என்று அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் அனைத்துக்கும் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் கூடுதலாக கவுரவ விரிவுரையாளர் பணியிடம் தேவைப்படும் பட்சத்தில், அதுகுறித்த விவரங்களை அனுப்பி வைக்குமாறும், தேவைப்பட்டால் கூடுதல் கவுரவ விரிவுரையாளர்களைப் பணியமர்த்திக் கொள்ளலாம் என்றும் உத்தரவிட்டுள்ளது.