பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்; சமவேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் எனபன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோஜாக் எனப்படும் தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு இன்று ஒருநாள் வேலைநிறுத்தம் மேற்கொண்டுள்ளனர். ஆசிரியர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி 15 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டம் நடத்தி வரும் நிலையில், அவர்களுடன் பேச்சு நடத்துவதாகக் கூறி அரசு ஏமாற்றிவிட்டது என பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாசு பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அறிக்கையில் இராமதாசு கூறியது என்ன ?
பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்; ஊதிய முரண்பாடுகளைக் களைய வேண்டும்; தற்காலிக ஆசிரியர்களுக்கு பணி நிலைப்பு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 30 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் பத்தாண்டுக்கும் மேலாக போராடி வருகின்றனர். அவற்றில் ஒரு கோரிக்கையைக் கூட நிறைவேற்றாத தமிழக அரசு, கடந்த ஆண்டு திசம்பர் 21&ஆம் நாள் 243 என்ற எண் கொண்ட அரசாணையை பிறப்பித்து, அவர்களின் பதவி உயர்வு வாய்ப்புகளை பறித்திருக்கிறது. ஏற்கனவே வலியுறுத்தப்பட்டு வந்த 30 கோரிக்கைகளுடன், அரசாணை எண் 243&ஐ நீக்க வேண்டும் என்ற புதிய கோரிக்கையையும் சேர்த்து நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த ஜூலை 29, 30, 31 ஆகிய தேதிகளில் சென்னை பள்ளிக்கல்வி இயக்குனர் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஆசிரியர்களை கைது செய்தும், எண்ணற்ற அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டும் தமிழக அரசு கொடுமைப்படுத்தியது.
அதைத் தொடர்ந்து ஜூலை 30, செப்டம்பர் 6 ஆகிய தேதிகளில் பள்ளிக்கல்வித்துறை செயலர், பள்ளிக் கல்வித் துறை இயக்குனர், தொடக்கக்கல்வி இயக்குனர் ஆகியோர் டிட்டோஜாக் அமைப்பினருடன் பேச்சு நடத்தினர். அதில் ஆசிரியர்கள் முன்வைத்த முதன்மைக் கோரிக்கைகளில் ஒன்று கூட நிறைவேற்றப் படவில்லை. மாறாக, கல்வி மேலாண்மை தகவல் அமைப்பில் புள்ளிவிவரங்களை பதிவு செய்யும் பணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கை மட்டும் தான் முழுமையாக நிறைவேற்றப் பட்டுள்ளது. ஏற்கனவே நடந்த போராட்டங்களில் பங்கேற்ற ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள், பள்ளி மேலாண்மைக் கூட்டம் நடத்துதல் போன்ற சில கோரிக்கைகள் அரைகுறையாக ஏற்கப்பட்டுள்ளன.
சம வேலைக்கு, சம ஊதியம்
ஆனால், சமவேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆசிரியர் அமைப்புகள் பல கட்ட போராட்டங்களை நடத்தின. அதைத் தொடந்து அக்கோரிக்கையை ஆய்வு செய்ய பள்ளிக்கல்வித் துறை செயலாளர், இயக்குனர், தொடக்கக்கல்வி இயக்குனர் ஆகியோர் அடங்கிய குழு கடந்த ஆண்டு தொடக்கத்தில் அமைக்கப்பட்டது. அக்குழுவினர் ஆசிரியர் அமைப்புகளுடன் 10.03.2023, 14.06.2023, 01.11.2023 ஆகிய தேதிகளில் மூன்று கட்ட பேச்சு நடத்தினர். அதில் சிறிதும் முன்னேற்றம் ஏற்படவில்லை. அதுமட்டுமின்றி, கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக எந்த பேச்சும் நடத்தப்படவில்லை. மூவர் குழுவில் இடம் பெற்றிருந்த மூவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டு விட்ட நிலையில், இப்போது அக்கோரிக்கை குறித்து மீண்டும் கருத்துக் கேட்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. 20 மாதங்களாக எந்தத் தீர்வும் காணாமல், இனி கருத்துக் கேட்டு சிக்கலைத் தீர்க்கப் போவதாக அரசு கூறுவது ஏமாற்று வேலை ஆகும்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்; உயர்கல்வித் தகுதிக்கு ஊக்கத்தொகை; உயர்கல்வி படித்தவர்களுக்கு பதவி உயர்வு; தற்காலிக ஆசிரியர்களுக்கு பணி நிலைப்பு; பதவி உயர்வு வாய்ப்புகளைப் பறிக்கும் அரசாணை 243&ஐ ரத்து செய்ய வேண்டும் ஆகிய முக்கியக் கோரிக்கைகளை பரிசீலிக்கக் கூட தமிழக அரசு முன்வரவில்லை. மத்திய அரசே புதிய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாற்றாக ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ஆனால், தமிழக அரசோ பழைய ஓய்வூதியக் கோரிக்கையை பரிசீலிக்கக்கூட முன்வரவில்லை. ஆசிரியர்களையும், அரசு ஊழியர்களையும் தமிழக அரசு எந்த அளவுக்கு கிள்ளுக்கீரையாக மதிக்கிறது என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டு ஆகும்.
காரணம் காட்டுகிறது அரசு
எளிதில் நிறைவேற்றக்கூடிய பல கோரிக்கைகளையும் நீதிமன்ற வழக்குகளைக் காரணம் காட்டி நிறைவேற்ற மறுக்கிறது தமிழக அரசு. தமிழக அரசு நினைத்தால் ஒரே நாளில் அந்த வழக்குகளை உயர்நீதிமன்ற ஒப்புதலுடன் முடிவுக்கு கொண்டு வந்து விடலாம். ஆனால், ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஏற்பதற்கு தமிழக அரசுக்கு மனமில்லாதது தான் அனைத்துச் சிக்கல்களுக்கும் காரணம் ஆகும். கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் தமிழக அரசு இந்த அளவுக்கு அலட்சியம் காட்டுவதால் தான் டிட்டோஜாக் அமைப்பினர் வேறு வழியின்றி இன்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தமும், செப்டம்பர் 29&ஆம் தேதி முதல் அக்டோபர் 1&ஆம் தேதி வரை கோட்டை முற்றுகைப் போராட்டத்தையும் நடத்த முடிவு செய்திருக்கின்றனர்.
எதிர்காலத் தலைமுறையினரை அறிவார்ந்த சமுதாயமாக உருவாக்குவது ஆசிரியர்கள் தான். அதிலும், தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு இதில் சிறப்புப் பங்கு உண்டு. இத்தகைய பெருமை கொண்ட ஆசிரியர்கள் அவர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையில் இறங்கி போராடுவதையே தங்களுக்கு ஏற்பட்ட அவமதிப்பாக அரசு கருத வேண்டும். எனவே, தமிழக அரசு இனியும் அலட்சியம் காட்டாமல், தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்; அதன் மூலம் அவர்களின் அடுத்தக்கட்ட கோட்டை முற்றுகைப் போராட்டத்தை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.