அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழாவில் வணக்கம் சொல்லித் தொடங்கிய பிரதமர் மோடி, விவேகானந்தர், கலாமை மேற்கோள் காட்டிப் பேசத் தொடங்கினார். உலகமே இந்திய இளைஞர்களை நோக்கித் தனது பார்வையைத் திருப்பியுள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். 


அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்று வருகிறது. இதில் பிரதமர் மோடியுடன் ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், அண்ணா பல்கலைக்கழகத் துணை வேந்தர் வேல்ராஜ், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர். 


அண்ணா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா தற்போது நடைபெற்று நிலையில், முதல்வர் ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு திருவள்ளுவர் சிலையை நினைவுப் பரிசாக வழங்கினார். 


உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விருந்தினர்கள் அனைவருக்கும் நினைவுப் பரிசுகளை வழங்கினார். அந்த வகையில் அமைச்சர் பொன்முடி, ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் நினைவுப் பரிசை வழங்கினார். அதைத் தொடர்ந்து வரவேற்பு உரையையும் அமைச்சர் பொன்முடி வழங்கினார். பட்டமளிப்பு விழாவில் பல்வேறு துறைகளில் முதலிடம் பிடித்த 69 மாணவர்களுக்குத் தங்க பதக்கம் வழங்கப்பட்டது. பிரதமர் மோடி பங்கேற்று பதக்கங்களை வழங்கினார். 


அதைத் தொடர்ந்து  பிரதமர் மோடி பேசியதாவது:


''அனைத்து மாணவர்களின் கனவுகளும் நனவாக வேண்டும் என்று வாழ்த்துகிறேன். மாணவர்களுக்கு மட்டுமல்லாமல், ஆசிரியர்களுக்கும் இன்று முக்கியமான நாள். நாட்டைக் கட்டி அமைக்கக்கூடிய ஆசிரியர்களாகிய நீங்கள்தான், நாளைய தலைவர்களை உருவாக்குகிறீர்கள். 


உலகமே இந்திய இளைஞர்களை நோக்கித் தனது பார்வையைத் திருப்பியுள்ளது. இளைஞர்களே இந்திய வளர்ச்சியின் இயந்திரம். கடந்த ஆண்டு அந்நியச் செலாவணியில் இந்தியா புதிய சாதனை படைத்துள்ளது. இளைஞர்களின் சாதனைகளைக் கொண்டாடுவதற்காக துடிப்புமிக்க சென்னை நகரத்தில் கூடி இருக்கிறோம். இளைஞர்களுக்கு புதிய கல்விக் கொள்கை சுதந்திரம் அளித்துள்ளது.


அண்ணா பல்கலைக்கழத்துடன் தொடர்பு கொண்ட குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின்  எண்ணங்களும் மதிப்புகளும் உங்களை ஊக்குவிக்கப்படும். 


உலகத்தின் வளர்ச்சி இயந்திரம் இந்தியா. இது உங்களுக்கான மிகப்பெரிய கவுரவம் மற்றும் பெருமை. நீங்கள் தனித்துவமான காலத்தில் பட்டம் பெற்றிருக்கிறீர்கள். இதைச் சிலர் நிச்சயமற்ற காலம் என்று சொல்லலாம். ஆனால் இது வாய்ப்புகளுக்கான காலம்.''


இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர.


யூடியூபில் வீடியோக்களை காண.