பள்ளிக் கல்வித்துறை  சார்பில் தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை- 2025 தற்போது வெளியிடப்பட்டுள்ளது. புதிய பார்வையில் கல்வி: உள்ளடங்கிய, சமத்துவ மற்றும் எதிர்கால ஆயத்தம் என்ற பெயரில் இந்த கல்விக் கொள்கையை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். இதில் என்னென்ன சிறப்பம்சங்கள்? பார்க்கலாம்.

பள்ளிக்கல்வி துறைக்கான கொள்கை முடிவுகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இன்று (ஆகஸ்ட் 8) துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் வெளியிட்டார்.

முன்னாள் நீதிபதி முருகேசன் தலைமையிலான குழு சமர்ப்பிப்பு

முன்னதாக ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையிலான குழு, ஓர் ஆண்டுக்கு முன்னதாக, மாநில கல்விக் கொள்கை பற்றிய தனது அறிக்கையை முதல்வரிடம் வழங்கியது. இந்த நிலையில் பள்ளிக் கல்வித்துறைக்கான கொள்கைகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. இதனை முதலமைச்சர் நாளை (ஆகஸ்ட் 8ஆம் தேதி) காலை சென்னையில் நடைபெறும் விழாவில் வெளியிடுகிறார்.

மாநில கல்விக் கொள்கையின் படி, இனி 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு மட்டுமே பொத்தேர்வு நடைபெற உள்ளது. 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட உள்ளது. அதேபோல, 8ஆம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் கட்டாயத் தேர்ச்சி அளிக்கப்பட உள்ளது. இதன்மூலம் 3, 5 மற்றும் 8ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு என்னும் தேசிய கல்விக் கொள்கை பரிந்துரை நிராகரிக்கப்பட்டு உள்ளது.

அதேபோல தமிழ்நாட்டில் தமிழ், ஆங்கிலம் என இருமொழிக் கொள்கையே பின்பற்றப்படும் என்றும் மாநில கல்விக் கொள்கை பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  முன்னதாக தேசிய கல்விக் கொள்கையில் மும்மொழிக் கொள்கை கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டு இருந்ததற்கு, தமிழ்நாடு அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தேர்ச்சி எப்படி?

மேலும், ஆண்டு இறுதித் தேர்வு அடிப்படையில் மட்டும் அல்லாமல், ஆண்டு முழுவதும் மாணவர்களின் செயல்திறன் மதிப்பீடு செய்யப்பட்டு, தேர்ச்சி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.