இந்தியாவில் உயர்கல்வி முடித்தவர்களின் வேலைவாய்ப்பு மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் குறித்த கவலையை ஏற்படுத்தும் ஒரு சம்பவம் சமீபத்தில் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

Continues below advertisement

முனைவர் பட்டம் பெற்று, ஒப்பந்த அடிப்படையில் விரிவுரையாளராகப் பணியாற்றும் நபர் ஒருவர், போதிய வருமானம் இல்லாததால் குடும்பச் செலவுகளுக்காகப் பகுதி நேரமாக டாக்சி ஓட்டுநராகப் பணிபுரியும் தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

பி.எட்., எம்.ஃபில், பி.எச்டி.க்கு வெறும் 30 ஆயிரம் ரூபாய் ஊதியம்

திருமலை ராஜன், பல ஆண்டுகள் படித்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார். தற்போது அவர் சென்னை, மாநிலக் கல்லூரியில் ஒப்பந்த அடிப்படையிலான விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார். பி.எட்., எம்.ஃபில், பி.எச்டி. ஆகிய உயர்ந்த கல்வித்தகுதி இருந்தபோதிலும், அவருக்கு மாத ஊதியமாக வெறும் 30,000 ரூபாய் மட்டுமே வழங்கப்படுகிறது.

Continues below advertisement

தற்போதைய பொருளாதாரச் சூழலில், அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்ந்துள்ள நிலையில், இந்த 30,000 ரூபாய் ஊதியத்தை மட்டுமே நம்பி தனது குடும்பத்தை நடத்த முடியாத நிலை திருமலை ராஜனுக்கு  ஏற்பட்டுள்ளது. திருமணமாகி மனைவி, இரு குழந்தைகளுடன் உள்ள குடும்பத்தின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்யவும், அவர்களைக் காப்பாற்றவும் மாற்று வழி தேடிய அவர், தனது பணி நேரம் போக மீதமுள்ள நேரங்களில், சென்னையில் வாடகை கார் ஓட்டும் தொழிலைச் செய்து வருகிறார்.

குறைந்த சம்பளத்தின் காரணமாகவே

சமீபத்தில் இவரது காரில் பயணம் செய்த பயணி ஒருவர், ஓட்டுநரிடம் இயல்பாக உரையாடியுள்ளார். அப்போது திருமலை ராஜன், தான் ஒரு PhD பட்டதாரி என்பதையும், கல்லூரி விரிவுரையாளராகப் பணியாற்றி வரும் தனக்குக் கிடைக்கும் குறைந்த சம்பளத்தின் காரணமாகவே டாக்சி ஓட்டுகிறேன் என்ற வேதனையான உண்மையையும் பகிர்ந்துள்ளார்.

முன்னதாக நாமக்கல்லில் தனியார் கல்லூரி ஒன்றில் உதவிப் பேராசிரியராகவும் திருமலை ராஜன் பணியாற்றி உள்ளார்.

இந்தச் சம்பவம், நாட்டில் பல ஆண்டுகள் கஷ்டப்பட்டு உயர்கல்வி படித்த பின்பும், தகுதிக்கேற்ற நிரந்தர வேலையும், நியாயமான ஊதியமும் கிடைக்காமல் தவிக்கும் பலரின் நிலையைக் கண்முன் நிறுத்தியுள்ளது. மேலும், கல்வித்துறையில் பணியாற்றும் ஒப்பந்த ஆசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்களின் குறைவான ஊதிய முறை குறித்து சமூக வலைத்தளங்களில் பலரும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.