சட்டமன்ற தேர்தல் முடிவுகளால் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட கட்சியாக இருப்பது அதிமுக. ஜெயலலிதா மறைவின்போது கூட சந்திக்காத தடுமாற்றத்தை, இந்த சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பிறகு அதிமுக சந்தித்து வருகிறது.
செங்கோட்டையனைச் சந்தித்த லீமா ரோஸ்:
எடப்பாடி பழனிசாமி மீதே கட்சியில் கடுமையான அதிருப்திகள் உருவாகி வரும் சூழலில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு கட்சியில் சேர்ந்து லால்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற லீமா ரோஸ் மீது பலரும் மிக கடுமையான அதிருப்தியில் உள்ளனர். கட்சியின் தேர்தல் செலவிற்காக இவர் கோடிக்கணக்கில் செலவு செய்திருந்தாலும், இவரது செயல்பாடு கட்சியின் மேல்மட்டம் முதல் கீழ்மட்டம் வரை பலருக்கும் திருப்தியில்லாமல் இருப்பதாக கூறப்படுகிறது.
தேர்தல் முடிவுகளுக்கு பிறகு யாருடைய ஆட்சியமையாமல் இருந்த சூழலில், லீமா ரோஸ் கட்சியின் முதன்மை நிர்வாகி போல பேட்டி அளித்தது அப்போதே மேல்மட்ட தலைவர்கள் பலருக்கும் மனக்கசப்பை உண்டாக்கியது. இந்த சூழலில், தவெக ஆட்சியில் வருவாய் துறை அமைச்சராக பொறுப்பு வகிக்கும் செங்கோட்டையனை தலைமைச் செயலகத்தில் லீமா ரோஸ் நேற்று நேரில் சென்று சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அதிருப்தியில் அதிமுக:
தொகுதி கோரிக்கை தொடர்பாக இந்த சந்திப்பு நிகழ்ந்ததாக லீமா ரோஸ் தரப்பினர் கூறியிருந்தாலும், தவெக ஆட்சி அமைய முக்கிய பங்களிப்பை வழங்கியவரும், அமைச்சருமான ஆதவ் அர்ஜுனாவின் மாமியார் என்பதால் எப்போதும் லீமா ரோஸின் செயல்பாடுகளை அதிமுக-வின் நிர்வாகிகள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.
அதிமுக எம்எல்ஏ-க்கள் 6 பேர் தவெக-விற்கு தாவியுள்ள சூழலில், எஞ்சியுள்ள எம்எல்ஏ-க்களை கட்டுக்குள் கொண்டு வர வேண்டிய கட்டாயத்தில் எடப்பாடி பழனிசாமி உள்ளார். இந்த சூழலில், லீமா ரோஸ் அமைச்சர் செங்கோட்டையனை நேரில் சந்தித்திருப்பது அவருக்கும் அதிருப்தியை உண்டாக்கியுள்ளதாக ஒரு தரப்பினர் தெரிவிக்கின்றனர். லீமா ரோஸின் செயல்பாடுகளினால் மகளிர் அணியின் மூத்த நிர்வாகிகளும் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இதனால், லீமா ரோஸின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தவும், கண்காணிக்கவும் எடப்பாடி பழனிசாமிக்கு சில முக்கிய தலைவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதிமுக-வில் தற்போது மிக மோசமான சூழல் நிலவி வருகிறது. எடப்பாடி பழனிசாமி நடத்திய ஆலோசனைக் கூட்டத்தை முன்னாள் அமைச்சர்கள் கேபி அன்பழகன், எஸ்பி வேலுமணி, எம்எல்ஏ-க்கள் சுகுமார், அருண்மொழிவர்மன் என பலரும் புறக்கணித்து வருகின்றனர். 7 எம்எல்ஏ-க்கள் தவெக பக்கம் தாவ இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த சூழலில், அதிமுக எம்எல்ஏ-க்கள் தவெக அமைச்சர்களைச் சந்திப்பது கட்சியின் தொண்டர்கள் மத்தியில் பதற்றத்தை உண்டாக்கியுள்ளது.
