அரசுப்பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைக்கப்படுகிறதா? மாநில கல்விக் கொள்கை வரைவறிக்கையில், உடற்கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் கொள்கைக்கு முரணாக அரசு நடக்கலாமா என்று கேள்வி எழுந்துள்ளது. 


உடற்கல்வி ஆசிரிய பணியிடங்கள்:


தமிழ்நாட்டில் 1978ஆம் ஆண்டு உயர்நிலைப் பள்ளிகள் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, அரசாணை 525 கொண்டுவரப்பட்டது. அதன்படி, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 250-க்கும் மேற்பட்ட மாணவர்களைக் கொண்ட உயர்நிலைப் பள்ளிக்கு 1 உடற்கல்வி ஆசிரியர் நியமனம் செய்யப்படுவர். 550-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு 2 ஆசிரியரும், 850-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு 3 ஆசிரியர்களுக்கும் நியமிக்கப்படுவர். இதன்படி உயர்நிலைப் பள்ளிகளில் 250 மாணவர்களுக்கு ஓர் உடற்கல்வி ஆசிரியரும் மேல்நிலைப் பள்ளிகளில் 400 மாணவர்களுக்கு ஓர் உடற்கல்வி இயக்குநரும் நியமிக்கப்பட்டு வந்தனர்.


ஏற்கனவே காலியாக இருந்த பணியிடங்கள்


இதன்படி மாநிலம் முழுவதும் உள்ள 5,777 மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகளில் (2,864 உயர்நிலை, 2,914 மேல்நிலைப் பள்ளிகள்)  4,571 உடற்கல்வி ஆசிரியர், 93 உடற்கல்வி இயக்குநர் நிலை 2, 406 உடற்கல்வி இயக்குநர் நிலை 1 பணியிடங்கள் உருவாக்கப்பட்டன. இதிலேயே பல பணியிடங்கள் காலியாக இருப்பதாக உடற்கல்வி ஆசிரியர் சங்கங்கள் குற்றம் சாட்டி வந்தன.




இந்த நிலையில், அரசாணை 150 ஜூலை 1, 2024ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதன்படி அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், 700 அல்லது அதற்குக் குறைவான மாணவர்களுக்கு ஓர் உடற்கல்வி ஆசிரியர் நியமிக்கப்படுவார். அதேபோல அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 700-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு 2 உடற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்.


அதேபோல 701- 1500 வரையிலான மாணவர்களுக்கு 1 உடற்கல்வி ஆசிரியர், 1 உடற்கல்வி இயக்குநர் நியமிக்கப்படுவர். 1500-க்கும் அதிகமான மாணவர்களுக்கு 2 உடற்கல்வி ஆசிரியர்களும் ஓர் உடற்கல்வி இயக்குநரும் நியமிக்கப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உபரியாக உள்ள ஆசிரியர்கள் பணி நிரவல் செய்யப்படுவார்கள் என்றும் அதற்கான வழிமுறைகளும் அரசாணை 150-ல் வெளியிடப்பட்டுள்ளது. எனினும் இதற்குக் கடுமையான எதிர்ப்பு எழுந்துள்ளது.


முன்னுக்குப் பின் முரணா?


ஜூலை 1ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்ட மாநில கல்விக் கொள்கை வரைவறிக்கையில், உடற்கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதே நாளில் வெளியிடப்பட்ட அரசாணையில், உடற்கல்வி ஆசிரியர்கள் பணிநிரவல் செய்யப்படுவதாக வெளியான அறிவிப்பு சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.


இதுகுறித்து பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், திமுக அரசின் புதிய கல்விக் கொள்கையில், பள்ளிகளில் உடற்கல்வியையும், விளையாட்டுத் திறனையும் மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. அரசியல் நாடகத்துக்காக, தமிழ்நாடு கல்விக் கொள்கைக் குழு என்ற பெயரில் திமுக அமைத்த குழுவின் அறிக்கையை, திமுக அரசின் முதலமைச்சரோ, அமைச்சர்களோ ஒருவர் கூடப் படித்துப் பார்க்கவில்லை என்பது தெளிவாகியிருக்கிறது. வெறும் விளம்பரத்துக்காக ஒரு குழுவிற்கு இரண்டு ஆண்டுகள் பொதுமக்கள் வரிப்பணம் செலவிடப்பட்டிருக்கிறது. புதிய அரசாணை மூலம், அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணிக்காகக் காத்திருக்கும் இளைஞர்களின் வாய்ப்பு, இந்த அரசாணையால் பறிபோயிருக்கிறது.




கஞ்சாவில் இருந்து மாணவர்களைக் காப்பாற்றுவது உடற்கல்வி ஆசிரியர்கள்தான்


பெருகி வரும் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்கள் புழக்கத்திலிருந்து மாணவர்களை ஓரளவிற்குக் காப்பாற்றி வருவது, பள்ளி உடற்கல்வி ஆசிரியர்கள்தான். கஞ்சா விற்பனைக்குத் தடையாக இருக்கும் உடற்கல்வி ஆசிரியர்களைத் தடுப்பதற்காகவே, இது போன்ற வினோதமான அரசாணையை, திமுக அரசு பிறப்பித்திருப்பதாக எண்ண வேண்டியுள்ளது என்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.


இந்த நிலையில், உடற்கல்வி ஆசிரியர்கள் சங்கம் 100 மாணவர்களுக்கு ஓர் உடற்கல்வி ஆசிரியரை நியமிக்க வேண்டும். காலியாக உள்ள இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்துத் தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் இயக்குனர் சங்கப் பொது செயலாளர் பெரியதுரை ABP Nadu-விடம் விரிவாகப் பேசினார்.


’’அரசுப் பள்ளிகளில், பொதுவாக 35- 40 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் இருக்கிறார். ஆனால் தமிழக அரசு தற்போதைய அரசாணை மூலம் 700 மாணவர்களுக்கு ஓர் உடற்கல்வி ஆசிரியர் போதும் என்கிறது. குறைந்தபட்சம் 100 மாணவர்களுக்கு ஓர் உடற்கல்வி ஆசிரியர் தேவை.


இருக்கும் இடங்களே குறைக்கப்படுகின்றன


தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, முதல்வர் ஸ்டாலின் ஆகியோர் அனைத்து உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களும் நிரப்பப்படும் என்று அறிவித்தனர். ஆனால் இப்போது இருக்கும் இடங்களே குறைக்கப்படுகின்றன.




1 வாரத்தில் ஒவ்வொரு வகுப்புகளுக்கும் 2 உடற்கல்வி பாடவேளை நடத்தப்படும். 35 மாணவர்களுக்கு என்ற வகையில் 20 வகுப்புகளுக்கு 40 பாடவேளை ஓர் வாரத்தில் இருக்கும். ஆனால் இருக்கும் ஆசிரியர்களை வைத்தே உடற்கல்வியைக் கற்பிக்க முடியாத சூழலில், மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்து, ஆசிரியர்களுக்கான தேவையை அரசு குறைத்திருக்கிறது.


மொத்தமுள்ள 5,777 மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகளுக்கு சுமார் 5 ஆயிரம் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் மட்டுமே உள்ளன. மொத்தமுள்ள பணியிடங்களில் சுமார் 1,200- 1300 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் பள்ளிக்கு ஓர் ஆசிரியர் கூட இருக்க மாட்டார்கள்.    


இதற்கிடையே மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 7 ஆயிரம் நடுநிலைப் பள்ளிகளில் ஓர் உடற்கல்வி ஆசிரியர் கூட இல்லை. அதேபோல 22 ஆயிரம் தொடக்கப் பள்ளிகளிலும் உடற்கல்வி ஆசிரியரே கிடையாது. ஆனால் மத்திய அரசின் விதிமுறைகளின்படி, தொடக்கப் பள்ளிகளுக்கும் உடற்கல்வி ஆசிரியர்கள் இருக்க வேண்டும்.



நாங்கள்தான் கடைசி ஆசிரியர்களோ?


இந்த நிலையில் இருக்கும் உடற்கல்வி ஆசிரியர்களின் இடங்களையும் குறைப்பதால், நாங்கள்தான் கடைசி உடற்கல்வி ஆசிரியர்களோ என்று அச்சம் ஏற்படுகிறது.


அரசு 100 மாணவர்களுக்கு ஓர் உடற்கல்வி ஆசிரியர் பணியிடத்தை உருவாக்க வேண்டும். இருக்கும் பணியிடங்களைக் குறைக்கக் கூடாது. அதேபோல உடற்கல்விப் பாடத்தை கட்டாயமாக்கி, பொதுத்தேர்வில் அதற்கு மதிப்பெண்களை நிர்ணயிக்க வேண்டும்’’ என்று ஆசிரியர் பெரிய துரை தெரிவித்தார்.


அரசு உடற்கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து, அரசாணையைத் திரும்பப் பெற்று, உடற்கல்வி ஆசிரியர்களின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும் என்பதே எல்லோரின் எதிர்பார்ப்பாக உள்ளது.