பெரியார் பல்கலைக்கழக ஊழலுக்கு எதிராகப் போராடும்  ஆசிரியர் சங்கத் தலைவரை பழிவாங்க முயலுவதா என்று கேள்வி எழுப்பியுள்ள அன்புமணி, பல்கலைக்கழகப் பதிவாளரை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். 


இதுகுறித்துப் பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகள்:


''பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சேலத்தில் பெரியார் பல்கலைக்கழக தொழிலாளர் சங்கத்தினர் நடத்திய அறவழிப் போராட்டத்தில் பங்கேற்றதற்காக  பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் வைத்தியநாதன் மீது ஏன் ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளக்கூடாது? என்று விளக்கமளிக்கக் கோரி அவருக்கு பல்கலைக்கழகப் பொறுப்பு பதிவாளர் தங்கவேலு குறிப்பாணை அனுப்பியுள்ளார். இது கண்டிக்கத்தக்கது.


பல்கலைக்கழக பேராசிரியர் என்ற முறையில்  வைத்தியநாதன் போராட்டத்தில் பங்கேற்கவில்லை; பெரியார் பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர்  என்ற முறையில் கலந்து கொண்டுள்ளார். தொழிற்சங்க விதிகள் மற்றும் உரிமைகளின்படி  இதில் எந்த தவறும் இல்லை. இதை அறிந்திருந்தும் அவருக்கு குறிப்பாணை அனுப்புவது அப்பட்டமான பழிவாங்கும் செயல்!


பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக தமிழக அரசே விசாரணைக்கு ஆணையிட்டுள்ளது. அந்த விசாரணைக் குழு முன் அரசுத் தரப்பு சாட்சியாக பேராசிரியர் வைத்தியநாதன் சாட்சியளிக்க உள்ளார். அதைத் தடுக்கும் நோக்குடன் அச்சுறுத்துவதற்காகவே அவருக்கு குறிப்பாணை வழங்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.


தமிழக அரசால் பட்டியலிடப்பட்டுள்ள சேலம் பெரியார் பல்கலைக்கழக ஊழல் மற்றும் முறைகேடுகளில் பேராசிரியர் தங்கவேலு சம்பந்தப்பட்டுள்ளார். அப்படிப்பட்டவரை பொறுப்பு பதிவாளராக  நியமித்தது தவறு.  அவரது பழி வாங்கலை அனுமதிப்பது அதைவிட பெரும் தவறு. எனவே பேராசிரியர் வைத்தியநாதனுக்கு அனுப்பப்பட்டுள்ள குறிப்பாணையை திரும்பப் பெறவும் பழிவாங்கும் நோக்கில் செயல்படும் பேராசிரியர் தங்கவேலுவை பதிவாளர் பொறுப்பிலிருந்து நீக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்''.


இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார். 


சேலம்‌ பெரியார்‌ பல்கலைக்கழகத்தில்‌ உடற்கல்வி இயக்குநர்‌ நியமனத்தில்‌ பல்கலைக்கழக மானியக் குழுவின்‌ வழிகாட்டு நெறிமுறைகள்‌ பின்பற்றப்படாதது, பல்கலைக்கழக நூலகர்‌ மற்றும்‌ உடற்கல்வி இயக்குநர்‌ ஆகிய பதவிகள்‌ இடஒதுக்கீடு ஆணையின்படி நிரப்பப்படாதது, தமிழ்த்துறை தலைவர்‌ பெரியசாமி என்பவரின்‌ நியமனத்தில்‌ நடைபெற்ற முறைகேடுகளான போலி சான்று, தகுதியின்மை ஆகியவை குறித்து விசாரணைகள்‌ நடைபெற்றுவரும்‌ நிலையில்‌, இவரை விட பலர்‌ பணியில்‌ சீனியராக இருக்கும்‌ நிலையில்‌ பணியில்‌ இளையவரான இவரை ஆட்சிக்குழு உறுப்பினராக நியமனம்‌ செய்ய பரிந்துரை செய்து, விதிகளுக்கு புறம்பாக நியமித்தது,


பல்கலைக்கழகத்திற்குட்பட்ட அரசு உதவிபெறும்‌ கல்லூரிகளில்‌ காலியாகும்‌ உதவிப் பேராசிரியர்‌ பணியிடங்களை நிரப்பும்‌ குழுவில்‌ பல்கலைக்கழக பிரதிநிதி ஒருவர்‌ இடம்பெறவேண்டும்‌ என்ற  அடிப்படையில்‌, விதிகளுக்கு புறம்பாக பெரியசாமி என்பாரை முறைகேடாக நியமித்தது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகள்‌, ஊழல்கள்‌ நடைபெறுவதாக பல புகார்கள்‌ அரசிடம்‌ பெறப்பட்டன. 


இந்த புகார்கள்‌ தொடர்பாக, விசாரணை மேற்கொள்ள உயர்கல்வித் துறை விசாரணைக்‌ குழு அமைத்தது குறிப்பிடத்தக்கது.