சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் 22 ஆவது பட்டமளிப்பு விழா இன்று பெரியார் கலையரங்கத்தில் நடைபெற்றது. இந்த பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். இதைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பெரியார் பல்கலைக்கழக வேந்தரும், தமிழக ஆளுநருமான ஆர்.என்.ரவி முனைவர் பட்ட ஆய்வை நிறைவு செய்துள்ள 153 மாணவர்களுக்கும், பெரியார் பல்கலைக்கழகத் துறைகள் மற்றும் இணைவு பெற்ற கல்லூரிகளில் முதுகலை மற்றும் இளங்கலை பாடங்களில் முதலிடம் பிடித்த 104 மாணவர்களுக்கும் தங்கப் பதக்கத்துடன் பட்ட சான்றிதழை விழா மேடையில் வழங்கினார். குறிப்பாக 2022-2023 ஆம் கல்வியாண்டில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவிகள் இவ்விழாவில் கலந்துகொண்டு பட்டங்களை பெற்றுக்கொண்டனர். 



மேலும், பெரியார் பல்கலைக்கழக துறைகளில் முதுகலை பாடப்பிரிவில் முதலிடம் பிடித்த 30 மாணவர்களுக்கும், இளங்கலை பாடங்களில் மூன்று மாணவர்களுக்கும், இணைவு பெற்ற கல்லூரிகளில் முதுகலைப் பாடப்பிரிவில் 31 மாணவர்களுக்கும், இளங்கலை பாடப்பிரிவில் 40 மாணவர்களுக்கும் தங்கப் பதக்கத்துடன் பட்ட சான்றிதழ்களையும் ஆளுநர் மேடையில் வழங்கினார். இந்தப் பட்டமளிப்பு விழாவில் ஆளுநரிடம் பட்டங்களை பெற்ற 257 மாணவர்களுடன் சேர்த்து சேலம், தர்மபுரி, நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருக்கும் இணைவு பெற்ற கல்லூரிகளை சேர்ந்த 42,915 மாணவர்களும், பெரியார் பல்கலைக்கழக துறையின் பயின்ற 978 மாணவர்களும், பெரியார் தொலை நிலைக்கல்வி நிறுவனத்தில் பயின்ற 631 மாணவர்களும் பட்டங்களை பெற்றனர்.



இந்நிகழ்ச்சியில்,  திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழக இயக்குநர் பேராசிரியர் அகிலா பங்கேற்று பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்தினார். விழாவில் பெரியார் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் இரா.ஜெகநாதன் பதிவாளர் கே.தங்கவேல், தேர்வாணையர் பேராசிரியர் எஸ்.கதிரவன் மற்றும் பேராசிரியர்கள், ஆட்சிக்குழு மற்றும் ஆட்சிப்பேரவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி பங்கேற்காமல் புறக்கணித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.