கடந்த 13 கல்வி ஆண்டுகளாக ஆட்சியாளார்களுக்கும்‌‌ அதிகாரிகளுக்கும்‌ மனுக்கள்‌ வாயிலாகவும்‌ போராட்டங்கள்‌ வாயிலாகவும்‌ பணி நிரந்தரக் கோரிக்கையை வைத்தபோதும்‌ எந்த பலனும்‌ இல்லை என்பதால், டிசம்பர் 10ஆம் தேதி கோட்டையை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக பகுதிநேர ஆசிரியர்‌ சங்கம் அறிவித்துள்ளது.


தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள்‌ சங்கம்‌, தமிழக அனைத்து சிறப்பாசிரியர்கள்‌ சங்கம்‌, தமிழக சிறப்பாசிரியர்கள்‌ சங்கம்‌, ஒருங்கிணைந்த சிறப்பாசிரியர்கள்‌ சங்கம்‌ ஆகியவை இணைந்து பகுதிநேர ஆசிரியர்‌ சங்கங்களின்‌ ஒருங்கிணைப்புக் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:


12,500 ரூபாய் மட்டுமே ஊதியம்!


’’அரசு நடுநிலை, உயர் நிலை மற்றும்‌ மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ 12,000 பகுதி நேர ஆசிரியர்கள்‌ முறையான நியமனத்தில்‌ அரசுப் பள்ளி மாணவர்களின்‌ பன்முக திறன்களை மேம்படுத்தும்‌ பொருட்டு ரூபாய்‌.12,500/- ஊதியத்தில்‌ பணியாற்றி வருகிறோம்‌ .


குறைவான ஊதியம்‌ என்றாலும்‌ அரசுப் பள்ளி மாணவர்‌ நலன்கருதி பணியாற்றி வருகிறோம்‌. எங்களின்‌ குடும்ப வாழ்வாதாரத்திற்கு பணி நிரந்தரக் கோரிக்கை வைத்து வருகிறோம்‌.


கடந்த 13 கல்வி ஆண்டுகளாக மாணவாகளின்‌ மனச்சோர்வை போக்கும்‌ கல்வியை கற்றுத் தரும்‌ பகுதி நேர ஆசிரியர்கள்,‌ பணி நிரந்தரம்‌ இல்லாத நிலையில்‌ பொருளாதார பாதிப்பினாலும்‌ உறுதியில்லா வாழ்வாதாரம்‌ என்பதாலும்‌ மிகுந்த மனச்சோர்வுடன்‌ பணியாற்றி வருகிறோம்‌.


எந்த பலனும்‌ இல்லை


எங்கள்‌ நிலையில்‌ முன்னேற்றம்‌ ஏற்பட கடந்த 13 கல்வி ஆண்டுகளாக ஆட்சியாளார்களுக்கும்‌‌ அதிகாரிகளுக்கும்‌ மனுக்கள்‌ வாயிலாகவும்‌ போராட்டங்கள்‌ வாயிலாகவும்‌ பணிநிரந்தர கோரிக்கையை வைத்த போதும்‌ எந்த பலனும்‌ இல்லை.


இந்த நிலையில்‌ தமிழ்நாடு முதல்வர்‌‌ பகுதிநேர ஆசிரியர்கள்‌ பணி நிரந்தரம் செய்யப்படுவர்‌ என திமுக சட்டமன்ற தோ்தல்‌ அறிக்கைகள்‌ 2016 மற்றும்‌ 2021ல்‌ குறிப்பிட்டார்‌.


மருத்துவம்‌ பார்க்க வழியின்றி இறந்த ஆசிரியர்கள்


ஆட்சி பொறுப்பேற்று 3.6 ஆண்டுகள்‌ கடந்த நிலையில்‌ பகுதி நேர ஆசிரியர்கள்‌ வாழ்வில்‌ எந்த முன்னேற்றமும்‌ இல்லை. கொடுத்த வாக்குறுதி நிலுவையில்‌ உள்ள நிலையில்‌ பகுதிநேர ஆசிரியர்கள்‌ பலர்‌ எந்த பலனும்‌ இல்லாமல்‌ எதிர்காலம்‌ தெரியாமல்‌ பணி ஓய்வு பெற்றும்‌ பல பகுதிநேர ஆசிரியர்கள்‌ மனசோர்வின்‌ காரணமாக நோய்வாய்ப்பட்டு, முறையான மருத்துவம்‌ பார்க்க வழியின்றி இறந்துள்ளனர்‌.




டிசம்பர் 10-ல் கோட்டை முற்றுகை


எங்களின்‌ அவல நிலையை அதிகாரிகள்‌ மற்றும்‌ ஆட்சியாளர்களுக்கு தெரியப்படுத்த சென்னையில்‌ 10.12.2024 அன்று கோட்டை முற்றுகையிட்டு வாழ்வாதாரத்திற்கு தீர்வுக்கான முயல்கிறோம்‌. எனவே ஆட்சியாளர்கள்‌ பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம்‌ செய்து வாழ்வாதாரத்தினை உறுதி செய்யும்‌ வகையில்‌ தாங்கள்‌ ஆதரவு அறிக்கை வெளியிட பணிவுடன்‌ கோருகிறோம்‌’’.


இவ்வாறு பகுதிநேர ஆசிரியர் சங்கங்களின்‌ ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது.