விழுப்புரம்: சாத்தனூர் அணை திறப்பு காரணமாக தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளத்தால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளநீர் பெருக்கெடுத்து ஓடியதால் அரசூர், இருவேல்பட்டு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வெள்ள நீர் புகுந்து. இதனால் மக்கள் வீட்டை விட்டு வெளியேறினர், குடிநீர் உணவு இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் குடிநீர் உணவு வேண்டி சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். பொதுமக்களின் சாலை மறியல் காரணமாக சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் சுமார் 4 கிலோமீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்றது. 


 


இந்தத் தகவலை அறிந்த அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கௌதம சிகாமணி உள்ளிட்டோர் அரசூர் பகுதிக்கு சாலை மறியலில் ஈடுபட்டவர்களை பார்க்க சென்றனர்.


அப்பொழுது மக்கள் அமைச்சர் பொன்முடி மீது மக்கள் கோபத்தில் சரமாரியாக கேள்வி எழுப்பினர். இந்நிலையில் தென்பெண்ணையாற்றில் மணல் அள்ளியாதால்தான் இந்த பிரச்சனை எனவும் மழை பாதிப்புக்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, முன்கூட்டியே சாத்தனூர் அணையில் இருந்து நீர் திறந்து இருந்தால் எங்களுக்கு இந்த நிலை வந்திருக்காது எனவும் உங்களால் தான் நாங்கள் இப்போது நடுத்தெருவில் நிற்கிறோம், தண்ணீருக்கும் சாப்பாட்டிற்கும் பிச்சை எடுக்க வைத்துள்ளீர்கள் என மக்கள் அமைச்சர் பொன்முடி மீது சேற்றை வாரி அடித்தனர். இதனால் அந்த இடமே போர்க்களமாக மாறியது. போலீசார் அமைச்சர் பொன்முடியை பத்திரமாக மீட்டு காரில் அனுப்பி வைத்தனர். இதைத்தொடர்ந்து அமைச்சர் பொன்முடி வேறு இடத்திற்கு சென்று புயலால் பாதிக்கப்பட்ட மக்களை பார்த்து ஆறுதல் கூறியது விட்டு சென்றார். அமைச்சர் பொன்முடி மீது சேற்றை அள்ளி வீசிய சம்பவம் தற்போது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.


ஃபெஞ்சல் புயல் புதுச்சேரி - மகாபலிபுரம் அருகே கரையைக் கடந்த நிலையில், புதுச்சேரி மற்றும் விழுப்புரம் மாவட்டம் மரக்காணம், திண்டிவனம் பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்தது. குறிப்பாக, கடந்த இரண்டு நாட்களாக விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி போன்ற மாவட்டங்களில் மிக கனமழை கொட்டித் தீர்த்த நிலையில், பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது.


அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 56 செ.மீ அளவிற்கு அதிகனமழை கொட்டித் தீர்த்தது. அதேபோல் வானூர், மரக்காணம், திண்டிவனம் உள்ளிட்ட இடங்களில் 40 செ.மீட்டருக்கும் அதிகமான மழை பெய்துள்ளது. விழுப்புரத்தில் வரலாறு காணாத மழைப் பொழிவை அடுத்து, மாவட்டம் முழுவதுமே வெள்ளக்காடாக காட்சியளித்து வருகிறது. குடியிருப்புப் பகுதிகளை பெருமளவு வெள்ளம் சூழ்ந்துள்ளதால் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அத்தியாவசிய தேவைக்குக் கூட வெளியே செல்ல முடியாமல் கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.


புயல் கரையைக் கடந்த நிலையில், திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூர் அணை நேற்று நள்ளிரவு திறக்கப்பட்ட நிலையில் 1.70 லட்சம் கன அடி அணையிலிருந்து தென்பெண்ணையாற்றில் பாய்ந்தது. இதனால் தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால், விழுப்புரம் மாவட்டத்தில் தென்பெண்ணையாற்றங்கரையை ஒட்டிய சுமார் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெள்ளநீர் புகுந்து குடியிருப்புகளையும், விளைநிலப் பகுதிகளையும், சாலையையும் பாதித்துள்ளது.


சென்னை - திருச்சி சாலை மார்க்கத்தில் விழுப்புரம் மாவட்ட எல்லைப் பகுதியான அரசூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே வெள்ள நீர் பாய்ந்தோடுவதால், சென்னை-திருச்சி இடையேயான சாலைப் போக்குவரத்து முற்றுலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. தென்பெண்ணையாற்று வெள்ள நீர் தளவானூர், திருப்பாச்சனூர் பகுதியிலும் பாதிப்பை ஏற்படுத்தியதால் விக்கிராண்டி - தஞ்சை சாலைப் போக்குவரத்தும் பாதிப்படைந்துள்ளது.


இதனால், சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்குச் செல்லும் வாகனங்கள் திருவண்ணாமலை, திருக்கோவிலூர் வழியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கடலில் தென்பெண்ணையாறு கலக்குமிடமான கடலூரிலும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டு,நெல்லிக்குப்பம், முல்லிகிராம்பட்டு, கடலூர் குண்டு உப்பலவாடி, பெரிய கங்கணாங்குப்பம், தாழங்குடா, ஆல்பேட்டை எம்ஜிஆர் நகர், திடீர்குப்பம் குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ளநீர் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தியது.


தென்பெண்ணை, கோரையாற்றில் வெள்ளம் காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் 4 கிராமங்கள் தனித்தீவாக மாறி உள்ளன. மாரங்கியூர், சேத்தூர், பையூர், கொங்கராயனூர் ஆகிய 4 கிராமங்களும் வெள்ளம் சூழ்ந்து தனித் தீவுகளாயின. 2 ஆறுகளிலும் முழு கொள்ளளவைத் தாண்டி தண்ணீர் செல்வதால் பல கிராமங்களில் வெள்ளம் புகுந்தது. பையூரில் மேம்பாலத்துக்கு செல்லும் சாலை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்மழை மற்றும் சாத்தனூர் அணை திறப்பு காரணமாக தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அத்தியாவசிய தேவைக்குக் கூட வெளியே செல்ல முடியாமல் மாரங்கியூர், சேத்தூர் கிராம மக்கள் தவித்து வருகின்றனர்.


விழுப்புரம் மாவட்டத்தில் திருப்பாச்சனூர், மேட்டுப்பாளையம், பில்லூர், காணை, மரக்காணம், செஞ்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட தரைப்பாலங்களில் வெள்ளநீர் மூழ்கியதால் 150-கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.