மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களை நேரில் சந்தித்து பிரதமர் மோடி பேசும் பரிக்‌ஷா பே சார்ச்சா திட்டத்துக்கு இதுவரை 2.80 கோடி பேர் விண்ணப்பித்துள்ளனர்.


பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவர்களில் பெரும்பாலானோர் மன அழுத்தத்துக்கு ஆளாக வாய்ப்பு உள்ளது. அதனால் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களையும் தேர்வை எழுத உதவும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்களைக் கையாளவும் பிரதமர் மோடி 7 ஆண்டுகளாக ஆலோசனைகளை அளித்து வருகிறார்..


பரிக்‌ஷா பே சார்ச்சா என்ற பெயரில் இந்தத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. 2018-ம் ஆண்டில் இருந்து ’பரிக்‌ஷா பே சார்ச்சா’ செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், பொதுத் தேர்வுகள், தேர்வு அளிக்கும் அழுத்தம், அதில் இருந்து வெளியேறுவது எப்படி என்பன உள்ளிட்டவை குறித்து இந்தக் கலந்துரையாடலில் விவாதிக்கப்பட்டு வருகிறது.


விண்ணப்பிக்க இன்னும் சில தினங்களே


இந்த முறை 2025-ல், 8-வது ஆண்டாக இந்தக் கலந்துரையாடல் நடைபெற உள்ளது. இதற்கு ஜனவரி 14ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. விண்ணப்பிக்க இன்னும் சில தினங்களே உள்ளன.


2.8 கோடி பேர் விண்ணப்பம்


டிசம்பர் 14 முதல் விண்ணப்பப் பதிவு தொடங்கி நடந்து வரும் நிலையில், இதுவரை 2.8 கோடி பேர் விண்ணப்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பரிக்‌ஷா பே சார்ச்சா தொடங்கப்பட்டதிலேயே அதிகம் ஆகும்.


பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் என்று கூறப்பட்டாலும் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் இதில் கலந்துகொள்ள்ளலாம்.


மாணவர்கள் தேர்வு செய்யப்படுவது எப்படி?


இதில் முன்பதிவு செய்த மாணவர்களுக்கு, ஆன்லைனில் https://innovateindia1.mygov.in/ என்ற இணைப்பில் கொள்குறி வகை கேள்விகளுக்கான போட்டி நடத்தப்படும். அதில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள், பிரதமர் மோடியை நேரில் சந்தித்துக் கேள்வி கேட்கலாம். 


முதன்முறையாக “பரிக்‌ஷா பே சார்ச்சா 1.0”, கடந்த 2018ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள டால்கடோரா மைதானத்தில் நடைபெற்றது. அடுத்தடுத்த ஆண்டுகளில் கொரோனா காரணமாக ஆன்லைன் மூலமாக நடைபெற்றது.  தற்போது மீண்டும் நேரடியாக பரிக்‌ஷா பே சார்ச்சா நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.


தர்பார் மண்டபத்தில் நிகழ்ச்சி


இதில் தற்போது வரை 2.05 கோடி மாணவர்களும் 14.93 லட்சம் ஆசிரியர்களும் 5.69 லட்சம் பெற்றோர்களும் கலந்துகொண்டுள்ளனர். இந்த முறை, டெல்லியில் தர்பார் மண்டபத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
 
இந்த நிகழ்ச்சி ஃபேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும், தூர்தர்ஷன், வானொலி உள்ளிட்ட மத்திய அரசின் அதிகாரப்பூர்வ ஊடகங்களிலும் நேரலையாக ஒளிபரப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


கூடுதல் தகவல்களுக்கு:  mygov.in