பள்ளி மாணவர்களின் தேர்வு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைப் பரிமாறிக் கொள்ளும் வகையில், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோரைச் சந்திக்கிறார் பிரதமர் மோடி. இதற்காக "பரிக்ஷா பே சார்ச்சா" என்ற நிகழ்ச்சிக்கு (Pariksha Pe Charcha - PPC 2024) பதிவு செய்யவும் பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
அது என்ன பரிக்ஷா பே சார்ச்சா?
2018-ம் ஆண்டில் இருந்து ’பரிக்ஷா பே சார்ச்சா’ என்ற பெயரில் மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோருடன் பிரதமர் மோடி கலந்துரையாடி வருகிறார். தேர்வுகள், அவை அளிக்கும் அழுத்தம், அதில் இருந்து வெளியேறுவது எப்படி என்பன உள்ளிட்டவை குறித்து இந்தக் கலந்துரையாடலில் விவாதிக்கப்படும். 7ஆவது ஆண்டாக இந்தக் கலந்துரையாடல் நடைபெற உள்ளது.
யாரெல்லாம் கலந்துகொள்ளலாம்?
6 முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு போட்டி வைக்கப்படும். அதில் வெற்றி பெறும் மாணவர்கள், பிரதமர் மோடியுடன் நேரடியாகப் பேசலாம். அதேபோல ஆசிரியர்கள், பெற்றோர்களும் இதில் கலந்துகொள்ளலாம். ஆன்லைன் மூலம் தனியாக இதற்கு விண்ணப்பிக்க முடியும்.
500 வார்த்தைகளுக்கு மிகாமல், மாணவர்கள் தங்களின் கேள்விகளைப் பிரதமர் மோடிக்கு அனுப்பலாம். மாணவர்கள் ஜனவரி 12ஆம் தேதிக்குள் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும். நிகழ்வு எப்போது நடைபெறும் என்ற விவரத்தை மத்தியக் கல்வி அமைச்சகம் இதுவரை வெளியிடவில்லை.
முன்னதாக இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட மத்தியக் கல்வி அமைச்சகம், ’’மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கவனத்துக்கு..!
2024ஆம் ஆண்டுக்கான #ParikshaPeCharcha போட்டியில் கலந்துகொள்ள ஒரு வாய்ப்பு. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாணவரும் ஆவலுடன் காத்திருக்கும் பிரதமர் உடனான உரையாடலுக்கான நேரம் இது. ஆசிரியர்களும் பெற்றோர்களும் நம் மாணவர்களுக்கு ஆதரவான சமூகத்தை உருவாக்குவோம். தேர்வுகளை வாழ்க்கையின் திருவிழாவாகக் கொண்டாடும்’’ என்று தெரிவித்துள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
இந்த நிகழ்வில் கலந்துகொள்ள https://innovateindia.mygov.in/ppc-2024/என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும். இதில் மாணவர்கள் ஆசிரியர்கள் லாகின் வழியாகவோ, தனி லாகின் வழியாகவோ முன் பதிவு செய்யலாம். ஆசிரியர்கள் பெற்றோர்களுக்கும் தனித்தனி முன்பதிவு வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிகழ்ச்சியில் சுமார் 2050 மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் போட்டிகளின் மூலம் தேர்வு செய்யப்பட்டு, பரிக்ஷா பே சார்ச்சா நிகழ்ச்சி சார்ந்த பொருட்களை பரிசாகப் பெறுவர்.
இந்த நிகழ்ச்சி ஃபேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும், தூர்தர்ஷன், வானொலி உள்ளிட்ட மத்திய அரசின் அதிகாரப்பூர்வ ஊடகங்களிலும் நேரலையாக ஒளிபரப்பப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
கூடுதல் தகவல்களுக்கு: https://innovateindia.mygov.in/ppc-2024/