அம்மாக்களின் நேர மேலாண்மையை கவனித்து, திட்டமிட்டுப் படிக்க வேண்டும் என்று பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுளார். பரிக்‌ஷா பே சார்ச்சா நிகழ்ச்சியில் மோடி இவ்வாறு தெரிவித்துள்ளார். 

Continues below advertisement


பள்ளி மாணவர்களின் தேர்வு, அதை எதிர்கொள்ளும்போது உருவாகும் மன அழுத்தத்தைப் போக்குவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்களைப் பரிமாறிக் கொள்ளும் வகையில், மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோரைப் பிரதமர் மோடி ஆண்டுதோறும் சந்தித்துப் பேசி வருகிறார். இந்த நிகழ்ச்சி பரிக்‌ஷா பே சார்ச்சா என்ற பெயரில் நடைபெற்று வருகின்றது. 


அந்த வகையில் 2023ஆம் ஆண்டுக்கான நிகழ்ச்சி இன்று (ஜனவரி 27ஆம் தேதி) டெல்லி டல்கோத்ரா மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.






நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, ''என்றேனும் உங்கள் அம்மாவின் நேர மேலாண்மைத் திறனை கவனித்திருக்கிறீர்களா? ஓர் தாய் தான் செய்யும் மகத்தான வேலைகளை என்றுமே சுமையாக நினைத்ததில்லை. அவர்களைப் பார்த்து, நேர மேலாண்மையைக் கற்றுக் கொள்ளுங்கள். 


நல் வழியில் படைப்பாற்றலைப் பயன்படுத்துங்கள்


சில மாணவர்கள் தங்களின் படைப்பாற்றலை, தேர்வுகளில் ஏமாற்றுவதற்காகப் பயன்படுத்துகின்றனர். ஆனால் அந்த மாணவர்கள் தங்களின் நேரத்தையும் படைப்பாற்றலையும் நல்ல வழியில் பயன்படுத்தினால் வாழ்க்கையில் வெற்றியின் உயரங்களை அடையலாம். வாழ்க்கையில் குறுக்கு வழிகளை என்றுமே நாம் தேர்ந்தெடுக்கக் கூடாது. நமக்குள்ளேயே திட்டமிட்டுக்கொள்ள வேண்டும். 


ஒவ்வோர் ஆண்டும் நாடு முழுவதும் லட்சக் கணக்கான மாணவர்கள், தேர்வுகளை எதிர்கொள்வது எப்படி என்று ஆலோசனை கேட்டு எனக்குக் கடிதம் எழுதுகின்றனர். இந்த அனுபவம் எனக்கும் உத்வேகத்தை அளிப்பதாக உள்ளது. 


பெற்றோர்கள் மாணவர்களிடம் எதிர்பார்ப்பது இயல்பானதுதான். ஆனால் குழந்தைகளுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தக் கூடாது. அதே நேரத்தில் மாணவர்களும் தங்களின் திறனைக் குறைத்து மதிப்பிட்டுக் கொள்ளக்கூடாது'' என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.




எவ்வாறு காணலாம்?


பரிக்‌ஷா பே சார்ச்சா நிகழ்ச்சி, மத்திய அரசின் ஃபேஸ்புக், யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களிலும், தூர்தர்ஷன், வானொலி உள்ளிட்ட மத்திய அரசின் அதிகாரப்பூர்வ ஊடகங்களிலும் நேரலையாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது.


கடந்த ஆண்டைக் காண்டிலும் இரண்டு மடங்கு மாணவர்கள் நிகழ்ச்சிக்காக முன்பதிவு செய்துள்ளதாக, மத்தியக் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். 2022ஆம் ஆண்டு 15.73 லட்சம் பேர் முன்பதிவு செய்திருந்த நிலையில், 38.8 லட்சம் மாணவர்கள் இந்த முறை முன்பதிவு செய்துள்ளனர். 


2018ஆம் ஆண்டு முதல்முறையாக பரிக்‌ஷா பே சார்ச்சா நிகழ்ச்சி தொடங்கப்பட்டபோது 22,000 மாணவர்கள் மட்டுமே முன் பதிவு செய்திருந்தனர். இந்த முறை தமிழகத்தில் இருந்து சுமார் 10 லட்சம் மாணவர்கள், பிரதமர் உடனான நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.