தென்காசி மதுரை செல்லும் சாலையில் உள்ள அலங்கார் நகரைச்சேர்ந்த ஈஸ்வர ராஜ்-கோமதி இவர்களின் மகள் சண்முகவள்ளி பொறியியல் பட்டதாரியான இவர் 2020 ல் நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் 108 வது இடத்தையும், தமிழக அளவில் 3வது இடத்தையும், பெண்கள் பிரிவில் தமிழகத்தில் முதல் இடத்தையும் பிடித்துள்ளார். இவர் தொடக்கப்பள்ளி படிப்பை தென்காசி எம்.கே.வி.கே பள்ளியிலும், குற்றாலம் ஸ்ரீபராசக்தி வித்யாலயாவில் 10ம் வகுப்பையும், உயர்நிலைப் படிப்பை இலஞ்சி பாரத் மாண்டிசோரியில் முடித்தார். பின்னர் சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் பிஇ படித்த சண்முகவள்ளி கல்லூரியில் தங்கப்பதக்கம் பெற்று சாதனை வெற்றி புரிந்தவர்.


"கல்லூரியில் படிக்கும்போது தான் சிவில் சர்விஸ் ஆர்வம் வந்தது. தினமும் செய்தித்தாள் வாசிப்பது, செய்திகளை எல்லாம் விரல்நுனியில் வைத்திருப்பது என்று இருந்தேன். இறுதியாண்டு படிப்பு முடிக்கும் நேரம் நிறைய வேலைகள் வந்தது. அப்போது வெளிநாடு போகலாமா இல்லை  இங்கேயே வேலை செய்யலாமா என்று குழப்பம். பின்னர், நிதானமாக யோசித்தபோதுதான் யுபிஎஸ்சி என்று முடிவெடுத்தேன்." என்று சிவில் சர்வில் பாதைக்குள் வந்ததை ஆர்வத்துடன் கூறுகிறார்.



இதற்கு தூண்டுதலாக இருந்தவர்கள் குறித்து, "சிறு வயதில் கிரண்பேடி சம்மந்தப்பட்ட செய்திகள் எல்லாம் வாசித்திருக்கிறேன். பிறகு டிஜிபி சைலேந்திரபாபு ஐபிஎஸ் சார், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ் சார் பற்றிய செய்திகள் எல்லாம் உற்சாகம் தந்தது. முதல் இரண்டு முறையும் என்னால் முதல்நிலை தேர்வு தாண்ட முடியவில்லை, விடாமல் முயற்சி செய்தேன். மூன்றாவது முறை மூன்று தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றேன். இதுக்கு என் குடும்பம் நிறைய ஒத்துழைப்பு கொடுத்தார்கள்’’ என்கிறவரைத் தொடர்கிறார் அப்பா ஈஸ்வரராஜ்.‘‘சண்முகவள்ளி படிப்பில் எப்போதும் முதலிடம்தான். பத்தாம் வகுப்பு வரை குற்றாலம் பராசக்தி வித்யாலயா பள்ளியில் சிபிஎஸ்இ வழியில் படித்தாள். அப்போது பத்தாம் வகுப்பில் 500க்கு 500 மார்க் வாங்கி மாநிலத்துல முதலிடம் பிடித்தாள். பின்னர், பாரத் மான்டிசோரி பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்தாள். இது மாநில வழிக் கல்வி. 1200க்கு 1184 மார்க் வாங்கி மாவட்ட அளவில் முதலிடமும், மாநில அளவில் ஐந்தாவது இடமும் பிடித்தாள். அண்ணா பல்கலைக்கழகத்தில் எட்டு செமஸ்டரிலும் எட்டு கோல்டு மெடல் வாங்கியிருக்கிறாள். படிப்பு மட்டுமல்ல. பொதுஅறிவிலும் சிறுவயதில் இருந்தே ஆர்வம் அதிகம். உலக நடப்புகளை உடனடியாக கூறுவாள். ஐஏஎஸ் படிக்க வேண்டும் என்று கூறிய போது எல்லோருமே உற்சாகப்படுத்தினோம்." என்று பெருமையாக கூறினார்.



‘‘நான் இதற்காக சமூகவியல் பாடத்தை விருப்பப் பாடமா எடுத்து படித்தேன். என்னுடைய எஞ்சினியரிங் பாடம் விருப்பத்தாளில் இல்லை. அதனால, விருப்பப் பாடத்தாளில் பொலிட்டிக்கல் சயின்ஸ், சமூகவியல் உள்ளிட்ட நான்கைந்து பாடங்களை பார்த்தேன். எனக்கு சமூகவியல் மீது நாட்டம் அதிகம். அதனால், அதைத் தேர்ந்தெடுத்து படித்தேன். பொதுவாக, சிவில் சர்வீஸ் தேர்வை எதிர்கொள்ள நாம் மனதளவில் தயாராக இருக்க வேண்டும். நமக்கு நிறைய தடைகள் வரும். வேறு வேலைக்கு போகலாம் என்று கூட தோன்றும். சிலர் மாற்றுத்திட்டம் எல்லாம் வைத்திருப்பார்கள்.


ஆனால், நம்பிக்கையோடு எல்லாவற்றையும் கடந்து வர வேண்டும். அப்படி வந்தால் நிச்சயம் நமக்கு வெற்றிதான். நான் இதைவிட்டு போக வேண்டும் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. கொரோனா நேரத்தில் ஒருமுகப்படுத்தி படித்தேன். வெற்றி கிடைத்தது. இந்நேரத்த்தில் எனக்கு பயிற்சி அளித்த எல்லா மையத்தினருக்கும் நன்றி சொல்லிக்கொள்கிறேன்’’ என்றவர், ‘‘என்னுடைய பணியை திறமையாக செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். மக்கள் எளிதாக அணுகக்கூடிய ஒரு ஐஏஎஸ்ஸாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்...’’ என  உற்சாகமாகச் சொல்கிறார் சண்முகவள்ளி.