2021 – 22ஆம் கல்வி ஆண்டில் நாட்டில் 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் சுமார்29 லட்சம் மாணவர்கள் தோல்வி அடைந்துள்ளதாக மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். மக்களவையில் திமுக மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி கேட்ட கேள்விக்கு அமைச்சர் இந்த பதிலை அளித்துள்ளார்.
இதன்படி, மத்தியக் கல்வி அமைச்சகம் மாணவர்கள் இடைநிற்றல், தோல்வி அடைந்தது குறித்த புள்ளிவிவரங்களை அளித்துள்ளது. அதில் கூறப்பட்டு உள்ளதாவது:
’’மத்தியக் கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை (DoSEL) கடந்த ஆண்டு 29.5 லட்சம் மாணவர்கள் 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வில் தோல்வி அடைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இந்திய நாட்டில் 10ஆம் வகுப்புக்குப் பிறகு இடைநின்ற மாணவர்களின் சதவீதம் 20.6 ஆக உள்ளது.
நாடு முழுவதும் 18,99,08,809 மாணவர்கள் தேர்வை எழுதிய நிலையில், 160,346,671 மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். 29,561,138 மாணவர்கள் தோல்வி அடைந்த நிலையில், அவர்களால் 11ஆம் வகுப்புக்குச் செல்ல முடியாத நிலை மேற்பட்டுள்ளது.
அதிகரிக்கும் தோல்வி விகிதம்
10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வைப் பொறுத்தவரை 2019ஆம் ஆண்டில் 1,09,800 மாணவர்கள் தேர்வில் தோற்றனர். 2020ஆம் ஆண்டில், 1,00,812 ஆக எண்ணிக்கை குறைந்த நிலையில், ஆச்சரியப்படும் விதமாக 2021-ல், 31,196 பேர் மட்டுமே தேர்ச்சி பெறவில்லை. எனினு இந்த எண்ணிக்கை 2022-ல் திடீரென அதிகரித்து, 1,17,308 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் வாசிக்கலாம்: EXCLUSIVE: பெருமழை, பேரிடர், வெள்ளம்: இனி இதுதான் எதிர்காலமா?- நீரியல் நிபுணர்கள் சிறப்புப் பேட்டி!
மாநிலக் கல்வி வாரியங்களில் அதிகரித்த தோல்வி
தேசிய திறந்த நிலைப் பள்ளி (NIOS), அஸ்ஸாம் இடைநிலைக் கல்வி வாரியம், பிஹார் பள்ளி தேர்வு வாரியம் (BSEB), சத்தீஸ்கர் இடைநிலைக் கல்வி வாரியம், குஜராத் இடைநிலை மற்றும் மேல்நிலைக் கல்வி வாரியம், ஹரியானா பள்ளிக் கல்வி வாரியம் (HSEB), மகாராஷ்டிர மாநில இடைநிலை மற்றும் உயர்நிலைக் கல்வி வாரியம், மத்தியப் பிரதேச இடைநிலைக் கல்விக் குழு, உத்தரப் பிரதேச கல்வி வாரியம் (மத்யமிக் சிக்ஷா பரிஷத்) உள்ளிட்ட மாநிலக் கல்வி வாரியங்களிலும் 10ஆம் வகுப்பில் மாணவர்கள் அதிக அளவில் தோல்வி அடைந்துள்ளனர்.
இடைநிற்றலுக்கு என்ன காரணம்?
மாணவர்கள் பொதுத் தேர்வுகளில் தோற்க ஏராளமான காரணிகள் பங்கு வகிக்கின்றன. பள்ளிகளுக்குச் சரியாகச் செல்லாமல் இருப்பது, பள்ளி விதிமுறைகளைப் புரிந்துகொள்வதில் ஏற்படும் சிக்கல்கள், படிப்பதில் போதுய ஆர்வம் இல்லாமல் இருப்பது, கேள்வித் தாள்கள் கடினமாக இருப்பது, தரமான ஆசிரியர்கள் குறைவாக இருப்பது, பெற்றோர்கள், பள்ளிகள், பெற்றோர்கள் மற்றும் பிற தரப்பிடம் இருந்து போதிய ஆதரவு இல்லாமல் இருப்பது என பல காரணங்கள் இதில் அடக்கம்.
மேலும் கல்வி பொதுப் பட்டியலில் இருப்பதால், பெரும்பாலான பள்ளிகள், சம்பந்தப்பட்ட மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் கட்டுப்பாட்டின்கீழ் இருக்கின்றன’’.
இவ்வாறு மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
இதையும் வாசிக்கலாம்: School Dropout: 10-ஆம் வகுப்பில் இடைநின்ற 30 லட்சம் இந்திய மாணவர்கள்: வெளியான அதிர்ச்சி அறிக்கை- தமிழ்நாட்டில் எவ்வளவு தெரியுமா?