2021 – 22ஆம் கல்வி ஆண்டில் நாட்டில் 10ஆம் வகுப்புக்குப் பிறகு இடைநின்ற மாணவர்களின் சதவீதம் 20.6 ஆக உள்ளது. மக்களவையில் இந்தத் தகவலை மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார். திமுக மக்களவை உறுப்பினர் கலாநிதி வீராசாமி கேட்ட கேள்விக்கு அமைச்சர் இந்த பதிலை அளித்துள்ளார்.


இதன்படி, மத்தியக் கல்வி அமைச்சகம் மாணவர்கள் இடைநிற்றல் குறித்த புள்ளிவிவரங்களை அளித்துள்ளது அதில் கூறப்பட்டு உள்ளதாவது:


இந்திய நாட்டில் 10ஆம் வகுப்புக்குப் பிறகு இடைநின்ற மாணவர்களின் சதவீதம் 20.6 ஆக உள்ளது. 2021 – 22ஆம் கல்வி ஆண்டில் எடுக்கப்பட்ட இந்த ஆய்வில் ஒடிசா, அதிகபட்ச இடைநிற்கும் மாணவர்களைக் கொண்டு முதலிடத்தில் உள்ளது. இங்கு பாதிக்குப் பாதி மாணவர்கள் உயர் படிப்பைத் தொடர்வதில்லை.  அதாவது ஒடிசாவில் 49.9 சதவீத இடை நிற்றல் பதிவாகி உள்ளது. அடுத்தபடியாக பிஹாரில், 42.1 சதவீத மாணவர்கள் 10ஆம் வகுப்புக்குப் பிறகு படிப்பைத் தொடரவில்லை என்று தெரிய வந்துள்ளது.


ஒட்டுமொத்தமாக நாடு முழுவதும் சுமார் 30 லட்சம் மாணவர்கள், 10ஆம் வகுப்புக்குப் பிறகு தங்களின் படிப்பைத் தொடரவில்லை. அதாவது 2022ஆம் ஆண்டில், 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வை 1,89,90,809 மாணவர்கள் எழுதினர். இதில், 29,56,138 மாணவர்கள் அடுத்த வகுப்புக்குச் செல்லவில்லை.


இடைநிற்றலுக்கு என்ன காரணம்?


மாணவர்கள் பொதுத் தேர்வுகளில் தோற்க ஏராளமான காரணிகள் பங்கு வகிக்கின்றன. பள்ளிகளுக்குச் சரியாகச் செல்லாமல் இருப்பது, பள்ளி விதிமுறைகளைப் புரிந்துகொள்வதில் ஏற்படும் சிக்கல்கள், படிப்பதில் போதுய ஆர்வம் இல்லாமல் இருப்பது, கேள்வித் தாள்கள் கடினமாக இருப்பது, தரமான ஆசிரியர்கள் குறைவாக இருப்பது, பெற்றோர்கள், பள்ளிகள், பெற்றோர்கள் மற்றும் பிற தரப்பிடம் இருந்து போதிய ஆதரவு இல்லாமல் இருப்பது என பல காரணங்கள் இதில் அடக்கம். கூடுதலாக, கல்வி பொதுப் பட்டியலில் இருப்பதால், பெரும்பாலான பள்ளிகள், சம்பந்தப்பட மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளின் கட்டுப்பாட்டின்கீழ் இருக்கின்றன.


இவ்வாறு மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.


ஆந்திரா, தெலங்கானாவில் அதிகம்


அத்துடன் மக்களவையில் மாநிலங்கள் வாரியாக 2018- 19 முதல் 2021- 22 ஆகிய 4 ஆண்டுகளுக்கான 10ஆம் வகுப்புக்குப் பிறகான இடைநிற்றல் அறிக்கை வெளியிடப்பட்டது. இதில், ஒடிசா, பிஹார் ஆகிய மாநிலங்களோடு, மேகாலயா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், அசாம், குஜராத், தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும் அதிக அளவிலான மாணவர்களின் இடைநிற்றம் விகிதம் பதிவாகி உள்ளது.


இந்த நிலையில் உத்தரப் பிரதேசம், திரிபுரா, தமிழ்நாடு, மத்தியப் பிரதேசம், இமாச்சலப் பிரதேசம், ஹரியாணா மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் 10 சதவீதத்துக்கும் குறைவான இடைநிற்றல் வீதம் பதிவாகி உள்ளது.


முன்னேறி வரும் அஸாம்


இதில் அஸாம் மாநிலத்தில் இடைநிற்றல் வீதம் கணிசமாகக் குறைந்து வருகிறது. அங்கு 44 சதவீதமாக இருந்த மாணவர் இடைநிற்றல் 28.3 சதவீதமாகக் குறைந்துள்ளது. அதே நேரத்தில் ஒடிசாவில், 12.8 சதவீதமாக இருந்த மாணவர் இடைநிற்றல், 49.9 சதவீதமாக அதிகரித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.