நாடு முழுவதும் உள்ள 45 மத்திய பல்கலைக்கழகங்களில் வெறும் நாலே சதவீத ஓபிசி பேராசிரியர்கள் பணியாற்றி வருவதாக மத்திய அரசு அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளது. 


இந்திய அரசைப் பொறுத்தவரை அகில இந்திய பிரிவில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டுடன், பொருளாதாரத்தில் பின் தங்கியோருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில்  69 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் கல்வி, வேலைவாய்ப்புகளில் பிரதிநிதித்துவம் பின்பற்றப்பட்டு வருகிறது. குறிப்பாக பிசி பிரிவினருக்கு 30 சதவீதம், எம்பிசி பிரிவினருக்கு 20 சதவீதம் என ஓபிசி பிரிவுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.


இந்த நிலையில், நாடு முழுவதும் உள்ள 45 மத்திய பல்கலைக்கழகங்களில் வெறும் நாலே சதவீத ஓபிசி பேராசிரியர்கள் பணியாற்றி வருவதாக மத்திய அரசு அதிர்ச்சித் தகவலைத் தெரிவித்துள்ளது. 


மக்களவையில் ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த எம்.பி. சஞ்சீவ் குமார், மத்தியப் பல்கலைக்கழகங்களில் ஒதுக்கப்பட்ட பிரிவுகளின் பிரதிநிதித்துவம் பற்றிக் கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு மத்தியக் கல்வித்துறை இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் பதில் அளித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:


எஸ்சி பிரிவைக் காட்டிலும் குறைவு


’’நாடு முழுவதும் உள்ள 45 மத்திய பல்கலைக்கழகங்களில் 4 சதவீத ஓபிசி பேராசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். 6 சதவீத இணைப் பேராசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இது எஸ்சி பிரிவைக் காட்டிலும் குறைவாகும்.


அதே நேரத்தில் 85 சதவீத பேராசிரியர்களும் 82 சதவீத இணைப் பேராசிரியர்களுக்கு பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் ஆவர். அதாவது மொத்தமுள்ள 1,341 பேராசிரியர் பணிகளில், 1,146 பேர் ஓசி எனப்படும் பொதுப் பிரிவினர் ஆவர். வெறும் 60 பேர் மட்டுமே ஓபிசி பிரிவினர் ஆவர். எஸ்சி பேராசிரியர்கள் 96 பேரும், எஸ்டி பிரிவில், 22 பேரும் பணியாற்றி வருகின்றனர். பட்டியலில், பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினர் 3 பேரும் மாற்றுத்திறனாளிகள் 14 பேரும் அடங்கும். 


அதேபோல மொத்தமுள்ள 2,817 இணைப் பேராசிரியர்களில், 2,304 பேர் ஓசி பிரிவினர் ஆவர். ஓபிசி பிரிவில் 187 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். எஸ்சி பிரிவில் 231 பேரும் எஸ்டியில் 69 பேரும் பணியாற்றி வருகின்றனர்.




இன்னும் பூர்த்தி செய்யப்படாத இட ஒதுக்கீடு 


எனினும் பல்கலைக்கழகங்களில் ஆரம்பக்கட்டப் பணியான உதவிப் பேராசிரியர்கள் பணியைப் பொறுத்தவரை ஓபிசி பிரிவினரின் பிரதிநிதித்துவம் சற்றே மேம்பட்டதாக இருக்கிறது. மொத்தமுள்ள 13,098 பணிகளில் 8,734 பேர் பொதுப் பிரிவினர் ஆவர். 1,901 ஓபிசி உதவிப் பேராசிரியர்கள் பணியில் சேர்ந்து பணியாற்றி வருகின்றனர். அதாவது, மொத்தம் 59 சதவீதம் பேர் பொதுப் பிரிவில் இருந்து தேர்வு செய்யப்பட்ட நிலையில், 18 சதவீத ஓபிசி பிரிவினர் உதவிப் பேராசிரியர்களாகப் பணியற்றி வருகின்றனர். எனினும் மத்திய அரசின் 27 சதவீத இட ஒதுக்கீடு இன்னும் பூர்த்தி செய்யப்படவில்லை. 


அதேபோல ஆசிரியர் அல்லாத பணியிடங்களில், ஓபிசி பிரிவில் 12 சதவீதம் பேர் பணியாற்றி வருகின்றனர். அதே நேரத்தில் இந்தப் பணியிடங்களில் 70 சதவீதம் பேர் பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்களாக இருக்கின்றனர்’’.


இவ்வாறு மத்திய இணை அமைச்சர் சுபாஷ் சர்க்கார் பதில் அளித்துள்ளார்.


அதிக அளவில் காலியாக இருக்கும் ஓபிசி காலிப் பணி இடங்களை நிரப்ப, தேசிய அளவிலான இயக்கம் நடத்தப்பட வேண்டும் என்று கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.