2021 சட்டமன்றத் தேர்தலின்போது அளித்த பழைய ஓய்வூதியத் திட்டம்செயலாளர் அமல்படுத்துவதற்கு சாத்தியம் இல்லை என்பதற்கு கட்டியம் கூறியிருக்கிறது இந்த முடிவு என்றும் தலைமைச் செயலக சங்கம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சங்கத்தின் தலைவர் வெங்கடேசன் தெரிவித்து உள்ளதாவது:
’’நிதித்துறையால் 12.11.2024 நாளிட்ட அரசாணை (நிலை) எண் 343ல்மறுசீரமைப்பு என்ற பெயரில் ஓய்வூதிய இயக்குநரகம் மற்றும் தகவல் தொகுப்பு மையம் ஆகிய துறைகள் கருவூலக் கணக்குத் துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஒழித்துக் கட்டப்பட்ட ஓய்வூதிய இயக்குநகரம்
இதன் காரணமாக, இரண்டு துறைத் தலைவர் பதவிகளும் பறிக்கப்பட்டுள்ளன. அதோடு மட்டுமல்லாமல், ஓய்வூதிய இயக்குநகரம் என்பதும் ஒழித்துக் கட்டப்பட்டுள்ளது. ஓய்வூதியர்களின் குறைகளை தீர்ப்பதற்கும் ஒய்வூதியர் இறந்தால் அவர்களுக்கு குடும்பப் பாதுகாப்பு வழங்குவதற்கும் ஒய்வூதிய இயக்குநரால் மாவட்டந்தோறும் நடத்தப்படும் ஒய்வூதியர் அதாலத் ஆகியவை அனைத்தும் இனிமேல் கருவூலக் கணக்குத் துறை ஆணையரால் கூடுதலாக நிர்வகிக்கப்படும் என்ற அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
2021 சட்டமன்றத் தேர்தலின்போது திராவிட முன்னேற்றக் கழகம், அரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் அளித்த முதன்மையான வாக்குறுதியான மீண்டும் பழைய ஒய்வூதியத் திட்டத்தினை அமல்படுத்துவது என்பதை ஆளுகின்ற திராவிட முள்னேற்றக் கழக அரசு நிறைவேற்றாது என்பதற்கு கட்டியம் கூறும் வகையில் ஒய்வூதிய இயக்குநரகத்தினை கருவூலக் கணக்குத் துறையுடன்இணைத்திருக்கும் நடவடிக்கையானது உள்ளது. இதற்கு தமிழ்நாடு தலைமைச் செயலகச் சங்கம் கடும் கண்டனத்தினை பதிவு செய்கிறது.
கடந்த 08.11.2024 அன்று தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற பள்ளிக்கல்வித் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில்தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கலந்து கொண்டு, “பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட நிதி சார்ந்த கோரிக்கைகளை நிறைவேற்ற வாய்ப்பில்லை, நிதி சாராத கோரிக்கைகளை மட்டும் தேர்தலுக்குள் நிறைவேற்ற முதலமைச்சர் அறிவுறுத்தல்" என்ற செய்தியானது காட்டுத் தீயாக அனைத்து சமூக ஊடகங்களிலும் சில செய்தித் தொலைக்காட்சிகளிலும் நாளிதழ்களிலும் பரவியது.
தமிழ்நாடு முதலமைச்சர் ஒப்புதலா?
அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களைப் பொறுத்தவரை வாக்குறுதிகள் எள்ளளவும் நிறைவேற்றப்படவில்லை என்பதோடு, தற்போதைய ஓய்வூதிய இயக்குநரகம் இணைப்பு என்பது 1.4.2003-க்குப் பிறகு அரசுப் பணியில் சேர்ந்து பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் உள்ளோருக்கு இனிமேல் ஓய்வூதியம் என்பது கானல் நீர்தான் என்பதை தமிழ்நாடு அரசு வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டது. இந்த அரசாணையானது, 2022-23 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் அறிவிப்பினை நடைமுறைப்படுத்தும் விதமாக வெளியிடப்பட்டுள்ளது என்ற சூழ்நிலையில், இது தமிழ்நாடு முதலமைச்சர் ஒப்புதலோடு வெளியிடப்பட்டுள்ளது என்பது தெள்ளத் தெளிவாகிறது.
முன்னாள் முதல்வர் கலைஞரால் வழங்கப்பட்ட சரண் விடுப்பு உரிமை காலவரையின்றி முடக்கம், 4 இலட்சத்திற்கு மேலாக காலிப் பணியிடங்களை நிரப்பாதது-அதிலும் குறிப்பாக குரூப் டி பணியாளர்களை தனியார் முகமை மூலமாக தொகுப்பூதியம், மதிப்பூதியம் என நிரப்புதல் ஆகிய தாக்குதல்களை தொடர்ச்சியாக அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் மீது தொடுத்துவரும், திராவிட முன்னேற்றக் கழக-திராவிட மாடல் அரசின் தற்போதைய நடவடிக்கையான ஒய்வூதிய இயக்குநரகம் இணைப்பு என்பது வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சும் நடவடிக்கையாக இருக்கிறது. இதற்கு மேலும், அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் தமிழ்நாடு அரசின் ஊழியர் விரோதப் போக்கினை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என்பது திண்ணம்.
காகித அறிக்கைகள் மட்டுமே
பல்வேறு அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில் பங்குகொள்ளும் தமிழ்நாடு முதலமைச்சர் பலமுறை “தேர்தல் கால வாக்குறுதிகள் 100 விழுக்காடு நிறைவேற்றப்படும்" என்ற உத்தரவாதத்தினை அளித்தாலும், அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் தொடர்பான தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்து நேரிடையாக குறிப்பிடாமல் தமிழ்நாடு அரசின் சார்பாக காகித அறிக்கைகள் மட்டுமே வெளிவந்து கொண்டிருக்கிறது.
புதிய ஓய்வூதியத் திட்டத்தினை 1.1.2004 முதல் நடைமுறைப்படுத்தியுள்ள ஒன்றிய அரசு கூட, அரசு ஊழியர்களின் ஒய்வுகால நலனைக் கருத்தில்கொண்டு, ஒருங்கிணைந்த ஒய்வூதியத்திட்டம் என கொண்டு வந்து, 50 விழுக்காடு ஒய்வூதியம் மற்றும் குடும்ப ஒய்வூதியம் என்று அறிவித்துள்ள நிலையில், தமிழ்நாடு அரசு எத்தருணத்திலும் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தினை அமல்படுத்தாது என்பதையே நிதித்துறையின் அரசாணை வெட்ட வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது.
எந்த வேறுபாடும் இல்லை
அதிமுக 2021 சட்டமன்றத் தோதலின்போது தேர்தல் அறிக்கையில் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் குறித்து எந்த வாக்குறுதியினையும் வழங்காததற்கும் கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசு ஊழியர்கள்- ஆசிரியர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றப்படாமல் இருப்பதற்கும் எந்த வகையிலும் வேறுபாடு என்பதே இல்லை என்பதுதான் ஓய்வூதிய இயக்குநரகம் இணைப்பு என்பதாகத்தான் பார்க்க வேண்டி இருக்கிறது.
தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு, நிதித்துறையால் வெளியிடப்பட்டுள்ள அரசாணையினை இரத்து செய்துவிட்டு, ஓய்வூதியர்கள்-குடும்ப ஓய்வூதியர்களுக்கான அடையாளமாக விளங்கக்கூடிய ஓய்வூதிய இயக்ககுநரகத்தினை மீண்டும் பழைய நிலையிலேயே செயல்பாட்டிற்குக் கொண்டு வந்து, அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களுக்கு அளித்த மீண்டும் பழைய ஒய்வூதியத் திட்டத்தை நிறைவேற்றி அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள், ஒய்வூதியர்கள்-குடும்ப ஓய்வூதியர்கள் மத்தியில் தமிழ்நாடு அரசு மீது ஏற்பட்டுள்ள கடும் அதிருப்தினை போக்க வேண்டும் என்று தலைமைச் செயலக சங்கம் தெரிவித்துள்ளது.