நடிகை கஸ்தூரிக்கு வரும் 29ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது. தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரிக்கு 29ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து சென்னை எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தெலங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்ட கஸ்தூரி சென்னை அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டார். நீதிமன்ற காவலை அடுத்து, எழும்பூர் நீதிமன்றத்தில் இருந்து புழல் சிறைக்கு கஸ்தூரி அழைத்து செல்லப்பட உள்ளார்.
விசாரணை வளையத்தில் கஸ்தூரி:
இதற்கு மத்தியில், புழல் சிறைக்கு அழைத்து செல்வதற்காக வாகனத்தில் ஏற்றும்போது, "அரசியல் அராஜகம் ஒழிக. நீதி வெல்லட்டும்" என கஸ்தூரி கோஷம் எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கு பேசும் பெண்களை ஆபாசமாக பேசிய வழக்கில் நடிகை கஸ்தூரியை போலீசார் தேடி வந்தனர். இந்த வழக்கில் நடிகை கஸ்தூரி முன் ஜாமின் கோரியிருந்தார். அதில் நீதிபதி கடுமையான கண்டனங்களை பதிவு செய்துவிட்டு மனுவை நிராகரித்தார்.
இதையடுத்து எழும்பூர் காவல்நிலையத்தில் போலீசார் கஸ்தூரி மீது வழக்குப்பதிவு செய்து தீவிரமாக தேடி வந்தனர். சென்னை போயஸ்கார்டனில் உள்ள தனது வீட்டை பூட்டிவிட்டு அவர் வெளியே சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகின.
நீதிமன்றத்தில் பரபரப்பு:
பின்னர், ஹைதராபாத்தில் தயாரிப்பாளர் ஒருவர் உதவியுடன் நடிகை கஸ்தூரி பதுங்கியுள்ளதாக போலீசாருக்கு தகவல்கள் கிடைத்தன. இதையடுத்து தமிழக போலீசார் தெலங்கானாவில் முகாமிட்டு தங்கி அவரை தேடி வந்தனர்.
இதையடுத்து, நடிகை கஸ்தூரி நேற்று இரவு கைது செய்யப்பட்டார். ஹைதராபாத்தில் தலைமறைவாக இருந்த அவரை தனிப்படை போலீஸ் சுற்றி வளைத்து பிடித்தது. பின்னர், அவர் சென்னைக்கு அழைத்து வரப்பட்டார். இந்த நிலையில், அவருக்கு வரும் 29ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் சமீபத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கஸ்தூரி, திராவிடம் பேசுபவர்களுக்கு கடவுள் மறுப்புதான் முதல் கொள்கையாக உள்ளது எனக் கூறினார். ஒவ்வொரு சமுதாயமாக பிளவுபடுத்த முயற்சி நடைபெற்று வருவதாகவும் குற்றம்சாட்டினார்.
பிராமணர்கள் குறித்து பேசிய அவர், பல்வேறு விதமாக அவர்கள் விமர்சிப்பதாக கூறினார். இங்கு, தெலுங்கு பேசுபவர்களாக உள்ளவர்கள், மன்னர்களின் அந்தப்புரத்து பெண்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் என கூறி பரபரப்பை கிளப்பி இருக்கிறார். கஸ்தூரியின் இந்த கருத்து பெரும் விமர்சனத்திற்கு உள்ளானது.