பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 3 சதவிகித அகவிலைப்படியினை முன் தேதியிட்டு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட  12 முக்கியக் கோரிக்கைளை  முதல்வருக்கு ஜாக்டோ- ஜியோ முன்வைத்துள்ளது. 


இதுகுறித்து அரசு ஊழியர்கள் சங்கமான ஜாக்டோ- ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளதாவது:


''அரசு ஊழியர்கள்- பணியாளர்கள் தொடர்பான கோரிக்கைகளைத் தமிழக முதலமைச்சர் விரைந்து 
நிறைவேற்றிட வேண்டுமென ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.


1. 2003க்குப் பிறகு அரசுப் பணியில் சேர்ந்தோருக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தினைக் கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தினையே அமல்படுத்திட வேண்டும். 


2. 1.1.2022 முதல் மத்திய அரசு வழங்கியுள்ள 3 சதவிகித அகவிலைப்படியினை முன் தேதியிட்டு வழங்கிட வேண்டும். 


3. முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் நடைமுறைப்படுத்தப்பட்டு, தற்போது காலவரையின்றி முடக்கப்பட்டுள்ள சரண் விடுப்பினை வழங்கிட வேண்டும். 


4. இடைநிலை ஆசிரியர்களுக்கும் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கும் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்பட்டு வரும் அநீதி களையப்பட வேண்டும். 


5. முதுநிலை ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்கள், அரசுப் பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள், தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், களப் பணியாளர்கள், பல்வேறு துறைகளிலுள்ள தொழில்நுட்ப ஊழியர்கள், ஊர்தி ஓட்டுநர்கள் ஆகியோருக்கான ஊதிய முரண்பாட்டினைக் களைய வேண்டும். 


கல்லூரிப் பேராசிரியர்களுக்கான நிலுவையிலுள்ள பணி மேம்பாடு (CAS) உடனடியாக வழங்கிட வேண்டும். மேலும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களைப் பட்டதாரி ஆசிரியராக உட்படுத்த வேண்டும். 


6. சிறப்பு காலமுறை ஊதியம் பெற்றுவரும் சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், கல்வித் துறையில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்கள், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் பகுதி நேர சிறப்பு ஆசிரியர்கள், செவிலியர்கள், பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும். 


7. 21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகை ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்பணியாளர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளதை உடனடியாக வழங்கிட வேண்டும். 


8. 2004 முதல் 2006 வரை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள்- பணியாளர்களின் பணிக்காலத்தினை அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பணி வரன்முறைப்படுத்தி ஊதியம் வழங்க வேண்டும். 


9. அரசாணை எண் 56ல் இளைஞர்களின் வேலைவாய்ப்பினைப் பறிக்கித வகையில் பகுப்பாய்வு குழு அமைக்கப்பட்டு, அக்குழு அரசிடம் அளித்த அறிக்கையினை முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும்.




10. முந்தைய அதிமுக அரசினால் உருவாக்கப்பட்டுள்ள பள்ளிக் கல்வித்துறை ஆணையரின் பணியிடத்தினை நீக்கிவிட்டு, ஏற்கனவே நடைமுறையில் இருந்தபடி பதவி மூப்பின் அடிப்படையில் நியமிக்கப்படும் பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் பணியிடத்தினை கொண்டு வர வேண்டும். 


11. பள்ளிக் கல்வித்துறையில் வெளியிடப்பட்டுள்ள ஆசிரியர்களின் நலன்களைப் பாதிக்கும் அரசாணை 101 மற்றும் 108 உடனடியாக ரத்து செய்திட வேண்டும். 


12. அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி / யூகேஜி வகுப்புகளுக்கு மத்திய அரசின் முடிவின்படி புதிய மாண்டிசோரி பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமனம் செய்ய வேண்டும்''.


இவ்வாறு ஜாக்டோ - ஜியோ தெரிவித்துள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண