Paper Rocket Review in Tamil: திரைப்படங்களை இயக்கிய கிருத்திகா உதயநிதியின்(Kiruthiga Udhayanidhi), முதல் ‛வெப்சீரிஸ்’ முயற்சி பேட்டர் ராக்கெட். காளிதாஸ் ஜெயராம், தன்யா ரவிச்சந்திரன், ரேணுகா, கருணாகரன், கவுரி கிஷான், சின்னி ஜெயந்த் உள்ளிட்ட நடிகர்கள் நடித்த முழு நீள.... திரைப்படம்.


வேலையில் பரபரப்பாக இருக்கும் மகன், மகனுடன் நேரத்தை செலவிட துடிக்கும் தந்தை. ஒரு கட்டத்தில் தந்தை இறக்கிறார். அவர் ஆசையை நிறைவேற்ற முடியவில்லை என்று மனரீதியாக பாதிக்கப்படுகிறார் மகன். அவர் சிகிச்சைக்கு செல்லும் இடத்தில், இறப்பை எதிர்நோக்கி காத்திருக்கும் சிலர், தன்னைப் போலவே சிகிச்சைக்கு வந்த சிலர் என 4 பேர் கொண்ட கூட்டணியோடு ஐந்தாவது ஆளாக இணைகிறார் ஹீரோ. 



சிகிச்சைக்கு வந்த தங்களுக்கு எப்போது வேண்டுமானாலும் இறப்பு வரலாம், எனவே வெளியில் எங்காவது கூட்டிட்டு போ ஜீவா என ஹீரோவிடம் அவர்கள் கோரிக்கை வைக்கிறார்கள். அவர்களை திட்டமிட்டு அங்கிருந்து அழைத்துச் செல்லும் ஹீரோ, அவர்களின் ஆசையை நிறைவேற்றி, அவர்களை புத்துணர்வாக்குவதும், சிலரின் கடைசி ஆசையை நிறைவேற்றுவதும் தான் கதை. 


இரண்டு மணி நேரத்தில் முடிக்க வேண்டிய கதை. எடிசோடுகளாக எடுக்க நினைத்து, கதாபாத்திரங்களின் நீண்ட தூர பயணம் போலவே, படமும் பயணிக்கிறது. ‛இதுக்கு இல்லையா சார் ஒரு எண்ட்’ என்பது போல, பல இடங்களில் காட்சிகள் நீண்டு போகிறது. ரூமுக்குள் அடைந்து கிடக்கும் தன் தந்தையின் நண்பரை ஒரு மருத்துவமனையில் சேர்க்கிறார் ஹீரோ. இது தான் சொர்க்கம் என்கிறார் அந்த முதியவர். ஆனால், அதே மருத்துவமனையில் சிகிச்சைக்கு வரும் தன் சகாக்கள், இந்த சிகிச்சை கொடுமையாக இருப்பதாக கூறுவதும், வெளியே சென்று சுற்றிப் பார்க்க வேண்டும் என்றும் கூறுவதும், அவர்கள் லாஜிக்கை, அவர்களே உடைப்பதைப் போன்று உள்ளது. இத்தனைக்கும் அவர்கள் யாரும் உள்நோயாளிகளாக தெரியவில்லை. அப்படியிருக்க, அவர்களை வெளியே செல்வதில் எது கட்டிப் போடுகிறது என்று தெரியவில்லை.




முதலின் தன் தந்தையின் நண்பருக்கு உதவி, பின்னர் தன் சக நோயாளிகளுக்கு உதவி என, எதற்கெடுத்தாலும் உதவி மட்டுமே செய்யும் ஹீரோ, புத்தர், ஏசு, காந்தியை மிஞ்சுகிறார். சினிமாக்களில் மட்டுமே இப்படிப்பட்ட கதாபாத்திரங்கள் சாத்தியம். ஊர் சுற்றி வந்ததோடு படம் முடியும் என்று பார்த்தால், அதன் பின் ஹீரோ காதல், காதலி பிளாஷ்பேக் என மீண்டும் பயணம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. 


எந்த இடத்தில் நிலை நிறுத்த வேண்டும் என்கிற குழப்பத்தில் படம் முடிந்திருக்கிறது. இது ஒரு பயணக்கதையா என்றால் இல்லை. இது ஒரு பாசக் கதையா என்றால் இல்லை. இது ஒரு தத்துவ கதையா என்றால் இல்லை. வேறு என்ன? எல்லாத்தையும் சேர்த்து குவித்து கிண்டிய ஒரு கலவை சாதம். அதில் எந்த ஃப்ளேவரை தூக்கலாக போடுவது என்கிற குழப்பத்தில், அனைத்தையும் சரிசமமாக தூவுவதாக நினைத்து, எங்கேயோ கோட்டை விட்டிருக்கிறார்கள்.


வெப் சீரிஸ் பரபரப்பாக இருந்தால், எபிசோடு முழுக்க முடிக்க முடியும் என்பதை உடைத்து, கொஞ்சம் நகைச்சுவை, நிறைய சென்டிமெண்ட் சேர்த்து எழுதியிருப்பது கொஞ்சம் ஆறுதல் என்றாலும், அதை சீரியலில் சேராமல், திரைப்படத்திலும் சேராமல், இரண்டுக்கும் நடுவே எடுத்து முடித்ததில் தான் கொஞ்சம் சொதப்பியிருக்கிறார்கள். 


ஒளிப்பதிவு, இசையெல்லாம் கச்சிதமாக இருந்தாலும், எடிட்டிங் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம். ஒவ்வொரு கதாபாத்திரங்களும் எதற்கெடுத்தாலும் சோகமாக முகத்தை வைத்துக் கொள்வதும், திடீரென குபீரென சிரிப்பதும் கொஞ்சம் திகட்டுகிறது. இயக்குனர் கிருத்திகா உதயநிதி, இதில் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். 


கொலை , கொள்ளை, துப்பறிவு, விசாரணை இதெல்லாம் வேண்டாம் என்று நினைப்பவர்கள், ‛பேப்பர் ராக்கெட்’ பார்க்கலாம். அவர்களுக்கு கட்டாயம் அது ஆறுதல் தரும், அமைதியை தரும்.