ஒடிசா மாநில அரசு மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் மிக முக்கியமான வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, மாநிலத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் முதுகலை பட்டப்படிப்பு வரை இலவசக் கல்வி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

2026- 27ஆம் கல்வி ஆண்டு முதல் ஞானோதயா- சிக்‌ஷரு சம்ருதி (Gyanodaya - Shiksharu Samruddhi) என்ற பெயரில் இந்தத் திட்டம் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக 5,467 கோடி ரூபாய் செலவிடப்படும் என்று ஒடிசா அரசு தெரிவித்துள்ளது. இதன்மூலம் ஒவ்வோர் ஆண்டும் 32 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் 43ஆவது அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

திட்டத்தின்முக்கியஅம்சங்கள்:இந்த கல்விக் கொள்கையின் மூலம், மாணவர்கள் எவ்விதப் பொருளாதாரத் தடையும் இன்றித் தங்கள் உயர் கல்வியைத் தொடர முடியும். கலை, அறிவியல் மற்றும் வணிகவியல் உள்ளிட்ட அனைத்துப் பிரிவுகளுக்கும் இந்த இலவசக் கல்வித் திட்டம் பொருந்தும்.

Continues below advertisement

இதன்படி, அரசுப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் இளங்கலை (UG) மற்றும் முதுகலை (PG) படிப்புகளுக்கான கல்விக் கட்டணம் முழுமையாக ரத்து செய்யப்படும்.

மாணவர்கள்கவனிக்கவேண்டியவை

  1. கல்விநிறுவனங்கள்: இந்தச் சலுகை ஒடிசா மாநில அரசின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமே பொருந்தும். தனியார் கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்களுக்கு இது பொருந்தாது.
  2. கட்டணவிலக்கு: கல்விக் கட்டணம், சேர்க்கைக் கட்டணம் மற்றும் இதர கல்வி சார்ந்த முக்கியக் கட்டணங்களை மாணவர்கள் செலுத்தத் தேவையில்லை.
  3. தகுதி: ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த இருப்பிடச் சான்றிதழ் வைத்துள்ள மாணவர்கள் இத்திட்டத்தின் மூலம் பயன்பெறலாம்.

திட்டத்தின்நோக்கம்

வறுமை மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாகப் பல ஏழை எளிய மற்றும் கிராமப்புற மாணவர்கள் பள்ளிக் கல்வியுடன் தங்கள் படிப்பை பாதியில் நிறுத்திவிடும் நிலை தொடர்ந்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு, உயர்கல்வி மாணவர் சேர்க்கை விகிதத்தை அதிகரிக்கவும், மாணவர்களின் இடைநிற்றலைக் குறைக்கவும் ஒடிசா அரசு இந்த அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது.

ஏற்கெனவே அங்கு எல்கேஜி முதல் 8ஆம் வகுப்பு வரை இலவசக் கல்வி வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.