மத்தியப் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் க்யூட் நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், மாணவர்கள் அவதிக்கு ஆளாகி உள்ளனர்.


கலப்பு முறையில் தேர்வு


மத்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன்கீழ் இயங்கி வரும் கல்வி நிலையங்களில் நடத்தப்படும் இளங்கலை மற்றும் முதுநிலை படிப்புகளில் சேர பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத் தேர்வு (Common University Entrance Test - CUET) கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வு 2024ஆம் ஆண்டு மே 15 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நடைபெற்றது.


முதல்முறையாக கலப்பு முறையில் நாளுக்கு 2 அல்லது 3 ஷிஃப்டுகளில் தேர்வு நடந்தது. குறிப்பாக 15 பாடங்களுக்கு பேனா – காகித முறையிலும் 48 பாடங்களுக்கு கணினி முறையிலும் நடைபெற்றது. இந்த க்யூட் தேர்வு நாடு முழுவதும் 13 மொழிகளில் 26 வெளிநாட்டு நகரங்கள் உட்பட 380 நகரங்களில் நடைபெற்றது. 


இதற்கான தேர்வு முடிவுகள் ஜூன் 30ஆம் தேதி அன்று வெளியாகும் என்று தகவல் வெளியானது. எனினும் இன்று வரை தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. அதுகுறித்த எந்த அறிவிப்பையும் தேர்வு முடிவுகளை வெளியிடும் தேசியத் தேர்வுகள் முகமை அளிக்கவில்லை.


நாடு முழுவதும் பொறியியல், மருத்துவம் ஆகிய தொழில்முறைப் படிப்புகளைத் தவிர, பிற படிப்புகளுக்கெல்லாம் மாணவர் சேர்க்கை பெரும்பாலும் முடிந்துவிட்டது. இந்த நிலையில், கலை, அறிவியல் படிப்புகளுக்கு நடத்தப்படும் நுழைவுத் தேர்வு முடிவுகளே இன்னும் வெளியாகவில்லை. தேர்வு முடிவுகள் வெளியான பிறகே மாணவர் சேர்க்கையைத் தொடங்க முடியும்.


என்ன காரணம்?


நீட், நெட் உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளில் நடந்த முறைகேடுகள், மோசடிகள், ஆள்மாறாட்டங்கள் காரணமாக யுஜிசி நெட் தேர்வு ரத்து செய்யப்பட்டது. சிஎஸ்ஐஆர் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது. முதுகலை நீட் தேர்வும் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டது. எதிர்ப்புக் குரல்கள் அதிகரித்த நிலையில், தேசியத் தேர்வுகள் முகமை தலைவர் சுபோத் குமார் நீக்கப்பட்டார். இதனால் க்யூட் தேர்வு முடிவுகளும் தாமதமாகி வருவதாகக் கூறப்படுகிறது.


யுஜிசி சொல்வது என்ன?


இதுகுறித்து யுஜிசி தலைவர் ஜெகதிஷ் குமார் கூறும்போது, ''தேசியத் தேர்வுகள் முகமை க்யூட் தேர்வு முடிவுகளில் பணியாற்றி வருகிறது. விரைவில் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிக்கப்படும்'' என்று தெரிவித்துள்ளார்.