யுஜிசி நெட் ஜூன் மாத அமர்வுக்கான தேர்வு முடிவுகள் வெளியானதாக ஸ்க்ரீன்ஷாட் வைரலான நிலையில், நாளை (அக்.18) தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று தேசியத் தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது. நீண்ட தாமதத்துக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. 


நாடு முழுவதும் செயல்பட்டு வரும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் ஆகப் பணியில் சேரவும், மாதாமாதம் இளநிலை ஆராய்ச்சியாளர் உதவித்தொகை பெறவும் நெட் தேர்வு எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். நெட் நுழைவுத் தேர்வு, பிஎச்.டி. மாணவர் சேர்க்கைக்கும் நடத்தப்படுகிறது. 


இந்தத் தேர்வை ஆண்டுக்கு 2 முறை தேசியத் தேர்வுகள் முகமைல் (NTA) நடத்துகிறது. மொத்தம் 83 பாடங்களுக்கு நடைபெறும் இத்தேர்வு, ஆன்லைன் வழியாக நடத்தப்படுகிறது.


ஜூன் மாதம் நடந்த தேர்வு


இந்த நிலையில் 2024ஆம் ஆண்டுக்கான ஜூன் மாத அமர்வு, ஜூன் 19ஆம் தேதி நடத்தப்பட்டது. 1,205 மையங்களில் நடத்தப்பட்ட இந்த தேர்வை 9,08,580 பேர் எழுதினர். எனினும் நீட் தேர்வு முறைகேடுகள் சர்ச்சையானதை எடுத்து, நெட் தேர்விலும் மோசடி நடந்ததாகக் கூறப்பட்டது. தொடர்ந்து நெட் தேர்வையே தேசியத் தேர்வுகள் முகமை ரத்து செய்தது. தொடர்ந்து மறுதேர்வு ஆகஸ்ட் 21 முதல் செப்டம்பர் 4-ம் தேதி வரை கணினி வழியில் நடத்தப்பட்டது.


இதற்கான தேர்வு முடிவுகள் செப்டம்பர் மாதமே வெளியாகும் என்று தகவல் வெளியானது. தேர்வர்களும் ஆர்வத்துடன் காத்திருந்த நிலையில், தேர்வு முடிவுகள் தள்ளிப் போயின. அக்டோபர் மாதத்தில் தேர்வு முடிவுகள் இன்று வெளியாகும், நாளை வரும் என்று தேர்வர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். 






இதற்கிடையே நேற்று யுஜிசி நெட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு விட்டதாக யுஜிசி ஸ்க்ரீன் ஷாட் வெளியானது. இந்த நிலையில் தேர்வு முடிவுகள் நாளை (அக்.18) வெளியாகும் என்று யுஜிசி அறிவித்துள்ளது. 


தேர்வர்கள் https://ugcnet.nta.ac.in/ என்ற இணைப்பை க்ளிக் செய்து தேர்வு முடிவுகளை அறியலாம். 


இ-மெயில் முகவரி: ugcnet@nta.ac.in


கூடுதல் விவரங்களுக்கு: www.nta.ac.in என்ற இணையதள முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்.