நீட் தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு தேர்வு மையத்தில் புதிய ‘N95’ ரக மாஸ்க்கள் வழங்கப்படும் என தேசியத் தேர்வு முகமை அறிவித்துள்ளது. நாளை நீட் 2021 தேர்வுகள் நாடு முழுவதும் நடைபெற இருக்கும் நிலையில் தேசியத் தேர்வு முகமை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் தேர்வு அறையில் இந்த மாஸ்கை அணிந்துகொண்டுதான் மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும் என்றும். சானிடைசர்கள், தண்ணீர் பாட்டில் மற்றும் ஹால் டிக்கெட் மட்டுமே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படும் என்றும் முகமை அறிவித்துள்ளது. இதுதவிர கொரோனா தொடர்பான படிவம் ஒன்றும் மாணவர்களுக்குத் தரப்படும் என்றும் அதில் கேட்கப்படும் கேள்விகளுக்கு மாணவர்கள் பதில் அளித்த பிறகே மாணவர்கள் தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது. நாளை மதியம் 2 மணிக்குத் தேர்வுகள் தொடங்க இருக்கும் நிலையில் தேர்வு மையத்துக்கு 1:30 மணிக்கே வரச்சொல்லி மாணவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.
இது தவிர மற்ற ஆண்டுகள் போல இல்லாமல் இந்த ஆண்டு நடைபெறும் இளநிலை நீட் தேர்வுகளில் சில மாற்றங்களை தேசியத் தேர்வு முகமை அண்மையில் அறிவித்திருந்தது. இதன்படி நீட் தேர்வுத்தாளில் வழக்கமாக 180 கேள்விகள் கொடுக்கப்படும். அவற்றில் ஒவ்வொரு கேள்விக்கும் 4 மதிப்பெண்கள் என மொத்தம் 720 மதிப்பெண்கள் வழங்கப்படும்.
ஆனால் இந்த முறை தேர்வில் இடம்பெறும் நான்கு பாடங்களுக்கும் பாடவாரியாக முதல் பகுதியில் 35 கேள்விகளும் இரண்டாவது பகுதியில் 15 கேள்விகளும் கொடுக்கப்படும். ஒவ்வொரு பாடத்திலிருந்தும் 50 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் இடம்பெற இருக்கின்றன. மேலும் சாய்ஸ் முறையும் இந்த ஆண்டு நீட் தேர்விலிருந்து அமலுக்கு வருகிறது. இதில் முதல் பகுதியில் கேட்கப்படும் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க வேண்டும். ஆனால் இரண்டாம் பகுதியில் கேட்கப்படும் கேள்விகளில் 10க்கு பதில் அளித்தாலே போதுமானது. கேட்கப்படும் 15 கேள்விகளில் பதில் தெரிந்த 10 கேள்விகளுக்கு பதில் அளித்தாலே போதும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.ஆனால் ஒன்றுக்குத் தவறான விடை அளித்தாலும் அது நெகட்டிவ் மதிப்பெண்ணாகக் கருதப்படும். அதற்கு ஒரு மதிப்பெண் குறைக்கப்படும். பதில் அளிக்காத சூழலில் அது நெகட்டிவ் மதிப்பெண்ணாக கருதப்படாது.
மேலும் முதன்முறையாக பஞ்சாபி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளும் சேர்க்கப்பட்டு 13 மொழிகளில் நீட் தேர்வு நடைபெற இருக்கிறது.
வெளிநாடுகளில் இருந்து தேர்வு எழுதும் மாணவர்களைக் கருத்தில் கொண்டு மத்தியக் கிழக்கு நாடான குவைத்திலும் ஒரு இந்திய நீட் தேர்வு மையம் நாளை இயங்க இருக்கிறது.
இதுதவிர இதுவரை மொத்தம் 155 நீட் தேர்வு நகரங்களில் மையங்கள் செயல்பட்ட நிலையில் கொரோனா பேரிடரைக் கருத்தில் கொண்டு கூடுதலாக 43 புதிய நகரங்களில் நீட் தேர்வு மையங்கள் சேர்க்கப்பட்டு 198 நகரங்களில் நாளை நீட் தேர்வு நடைபெற உள்ளது.