இளநிலை நீட் தேர்வுக்கான தற்காலிக விடைக் குறிப்புகளை தேசியத் தேர்வுகள் முகமை வெளியிட்டுள்ளது. இதைக் காண்பது, ஆட்சேபிப்பது எப்படி என்று காணலாம்.    


நாடு முழுவதும் மே 5ஆம் தேதி 24 லட்சத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள், 4,750 தேர்வு மையங்களில் இளநிலை நீட் தேர்வை எழுதினர். 571 நகரங்களில் இந்தத் தேர்வு நடைபெற்றது. இந்த நிலையில் தேர்வுக்கான தற்காலிக விடைக் குறிப்பு தற்போது வெளியாகி உள்ளது. ஒவ்வொரு கேள்விக்கும் ரூ.200 செலுத்தி, விடைகளை ஆட்சேபிக்கலாம். 


இளநிலை நீட் தேர்வானது தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி என 13 மொழிகளில் நடைபெற்ற நிலையில், முடிவுகள் ஜூன் 14ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  


இந்த நிலையில் நீட் தேர்வுக்கான ஆன்சர் கீ விரைவில் வெளியாகி உள்ளது. 


விடைக் குறிப்பைப் பெறுவது எப்படி?



  • NEET UG 2024-க்கான அதிகாரப்பூர்வ இணையதளத்தை க்ளிக் செய்யவும்.

  • முகப்புப் பக்கத்தில் தோன்றும் 'NEET UG 2024 provisional answer key' என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.

  • புதிய பக்கத்துக்கு எடுத்துச் செல்லப்படுவீர்கள்.

  • அதில், உங்களின் லாகின் விவரங்களை உள்ளிட்டு, சப்மிட் பொத்தானை அழுத்தவும்.

  • நீட் இளநிலைத் தேர்வுக்கான தற்காலிக விடைக் குறிப்புகள் வெளியாகி இருக்கும். அதைப் பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.


விடைக் குறிப்புகள் வெளியான உடன், அதில் ஆட்சேபம் ஏதும் இருந்தால், அதை மாணவர்கள் உரிய ஆதாரங்களோடு ஆட்சேபனை செய்யலாம். இதற்கு மே 31ஆம் தேதி இரவு 11.50 மணி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.


எனினும் ஒவ்வொரு கேள்விக்கும் 200 ரூபாய் கட்டணமாகச் செலுத்த வேண்டும். இந்தப் பணம் திரும்பத் தரப்பட மாட்டாது. அனைத்து ஆட்சேபனைகளும் பெறப்பட்ட பிறகு, தேசியத் தேர்வுகள் முகமை அவற்றைப் பரிசீலித்து, இறுதி விடைக் குறிப்புகளைத் தயார் செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த ஆண்டு கட்- ஆஃப் மதிப்பெண்கள் அதிகரிக்கும் என்றே கூறப்படுகிறது. இதனால் மருத்துவப் படிப்புகளுக்கான போட்டி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


கூடுதல் தகவல்களுக்கு: https://exams.nta.ac.in/NEET/images/Challenges-for-NEET-UG-2024.pdf என்ற இணைப்பை க்ளிக் செய்து பெறலாம். 


சந்தேகங்களுக்கு: 011- 40759000


இ- மெயில்: neet@nta.ac.in