இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு நடந்த நிலையில் அதில் மோசடி நடைபெற்றதாக ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில் மறுதேர்வுக்கான தேதியை தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
இந்தியாவைப் பொறுத்தவரை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் எனப்படும் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் நடைபெறும் இந்த தேர்வை நாடு முழுவதும் லட்சக்கணக்கான மாணவர்கள் எழுதுகின்றனர். இந்த நிலையில் 2026ம் ஆண்டுக்கான நீட் தேர்வு கடந்த மே 3ம் தேதி நடைபெற்றது. இதனை 22.8 லட்சம் மாணவர்கள் எழுதினர். 9.47 லட்சம் ஆண்கள் மற்றும் 13.33 லட்சம் பெண்கள் என இந்த நீட் தேர்வை விண்ணப்பித்து பல இடங்களில் அமைக்கப்பட்ட தேர்வு மையத்திற்கு சென்று கஷ்டப்பட்டு தேர்வு எழுதினர். 13 மொழிகளில், 552 நகரங்களில் உள்ள 5,500 தேர்வு மையங்களில் இந்த நீட் தேர்வு நடத்தப்பட்டது. எம்பிபிஎஸ், பிடிஎஸ், ஆயுஷ் மற்றும் நர்சிங் படிப்புகளுக்கான 2 லட்சம் இடங்கள் இருக்கும் நிலையில் இதற்கு கடும் போட்டி நிலவுகிறது.
ஆனால் 2026ம் ஆண்டு நீட் தேர்வில் முறைகேடு நடந்தது கண்டறியப்பட்டது . வினாத்தாள் கசிவு தவறை கண்டறிந்த தேசிய தேர்வு முகமை நடப்பாண்டுக்கான நீட் தேர்வை ரத்து செய்வதாக அறிவித்தது. புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும், மாணவர்கள் அளித்த கட்டணம் திரும்ப செலுத்தப்படும் என தெரிவித்தது. மேலும் புதிதாக எழுதப்போகும் தேர்வுக்கு விண்ணப்பிக்க தேவையில்லை எனவும் கூறியது. நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டது மாணவர்களிடையே கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியது. இந்த முடிவுக்கு மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக சாடியது.
