அரசு பணிக்கு தயாராகும் தேர்வர்கள்
அரசு பணியில் இணைய வேண்டும் என்பது பலரின் கனவாக இருக்கும். அந்த வகையில் அரசு பணியாளர் தேர்வு வாரியம் சார்பாக GROUP- I, II, IIA மற்றும் IV தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இரவு பகலாக தேர்விற்கு தயாராகி வருகிறார்கள். இந்த தேர்வில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக தனியார் பயிற்சி வகுப்புகளில் பல லட்சம் ரூபாய் கட்டணம் கட்டி பயின்று வருகிறார்கள். ஆனால் ஏழ்மையான தேர்வர்களால் பணம் கொடுத்து தேர்விற்கு தயாராக முடியாத நிலை உள்ளது. எனவே இவர்களுக்கு உதவிடும் வகையில், இலவசமாக பயிற்சி வகுப்புகளானது அரசு சார்பாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது சென்னையில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளது. இதே போல அந்த, அந்த மாவட்டங்களிலும் பயிற்சி வகுப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இலவச பயிற்சி வகுப்பு
இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாவட்டம், கிண்டி, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள அனைத்து போட்டித்தேர்வுகள் TNPSC GROUP- I, II, IIA & IV தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்புகள் 10-11-2025 முதல் துவங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை முதல் பயிற்சி வகுப்புகள்
இப்பயிற்சி வகுப்பில் இலவச பாடத் தொகுப்பு வழங்கப்படுவதுடன். பயிற்சி வகுப்பானது வார நாட்களில் திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10.00 மணி முதல் மதியம் 1.00 மணி வரை நடைபெறும். தொடர்ந்து மாதிரி தேர்வுகளும் நடத்தப்படும். இப்பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவர்கள் தங்களது ஆதார் அட்டை நகல் மற்றும் பாஸ்போர்ட் அளவுள்ள புகைப்படத்துடன் சென்னை-32, கிண்டி, மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை வேலை நாட்களில் அணுகவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த தகுதிவாய்ந்த மாற்றுத்திறனாளி மாணவ. மாணவியர்கள் இப்பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறுமாறு சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே கேட்டுக்கொண்டுள்ளார்.