தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு நீட் தேர்வு பாதிப்பு குறித்து ஆராய்வதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு ஒன்றை தமிழக அரசு அமைத்தது. இந்த குழுவின் அறிக்கை நேற்று வெளியானது. இந்த அறிக்கையில், நீட் தேர்வினால் தமிழக மாணவர்கள் எந்தளவிற்கு பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை புள்ளி விவரங்களுடன் விவரமாக கூறியுள்ளனர். தமிழ் வழி படிக்கும் மாணவர்களுக்கு நீட் எந்த அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது, அரசுப்பள்ளி மாணவர்கள் நீட்டால் பாதிக்கப்படுவது எப்படி உள்ளிட்ட பல தகவல்கள் புள்ளி விவரங்களாக கொடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக நீட் மட்டும் தொடர்ந்தால் தமிழ்நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பு மிக மோசமடையும். தமிழ்நாட்டின் சூழல் சுதந்திரத்துக்கு முந்தைய சூழலுக்கு தள்ளப்படும் என குறிப்பிட்டுள்ளது இந்த அறிக்கை.
இந்த அறிக்கை தமிழகம் மட்டுமின்றி, இந்தியா முழுவதுமே வைரலாகி வருகிறது. நீட்டை எதிர்க்கும் இந்தியாவின் பல்வேறு பகுதியைச் சேர்ந்தவர்களுக்கும் ஏகே ராஜன் அறிக்கையை எடுத்துக்காட்டாக குறிப்பிட்டு நீட் தடை செய்யவேண்டிய ஒன்று எனக் குறிப்பிட்டு வருகின்றனர். இது குறித்து பதிவிட்டுள்ள பத்திரிகையாளர் திலீப் மண்டால், ''இந்த ஐடியாவுக்காக வட இந்தியர்களான நாங்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கிறோம். நீட் என்பது ஒரு மோசடி. நீட்டால் ஏற்படும் பாதிப்பு குறித்து ஏகேராஜன் குழு கண்டுபிடித்து வெளியிட்ட புள்ளிவிவரம் இது. சமூக நீதிக்கும், ஏழ்மையானவர்களுக்கும் எதிராக நீட் இருப்பதற்கு இதுவே சான்று எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, தி.மு.க.வினர் தங்களது தேர்தல் அறிக்கையில் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என்று உறுதியளித்து இருந்தனர். அதன்படி, தமிழ்நாட்டில் நீட் தேர்வால் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டார். உறுப்பினர்களாக டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத், டாக்டர் ஜவஹர் நேசன், மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர், பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர், சட்டத்துறை அரசு செயலாளர், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மை செயலாளர், மருத்துவ கல்வி இயக்ககத்தின் இயக்குநர் ஆகியோர் உறுப்பினர்களாக செயல்பட்டனர்.
நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் பெரும்பாலானோர் கருத்தாக இருப்பதாக முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் குறிப்பிட்டிருந்தார். நீட் தேர்வு ஏற்படுத்தியுள்ள பாதிப்புகள் தொடர்பான ஆய்வுகளை தமிழ்நாடு அரசு அமைத்த முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழு மேற்கொண்டது. அது தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ஏ.கே.ராஜன், ‘நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் பெரும்பாலானோர் கருத்தாக இருக்கிறது. வேண்டும் என வெகுசிலர் மட்டுமே கூறியுள்ளனர்” என்று கூறினார்.