தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட சூழலில், சென்னை, சேலத்தில் தனியார் பள்ளிகள் இயங்கி வருகின்றன.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே பரவலாக மழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழ்நாட்டின் பல இடங்களிலும் நேற்று முதல் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியுள்ளது.
16 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை
இந்த நிலையில், கனமழை காரணமாக தமிழ்நாட்டில் இன்று 16 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை, விழுப்புரம், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, தஞ்சை, ராமநாதபுரம், திண்டுக்கல், திருவாரூர், அரியலூர், காஞ்சிபுரம், வேலூர், தூத்துக்குடி மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 14ஆம் தேதி புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாக உள்ளதாகவும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் சென்னை மாவட்டத்தில் விடிய விடிய மழை பெய்தது. இதனால் சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு காலை 6 மணிக்கு முன்னதாகவே விடுமுறை அளிக்கப்பட்டது. எனினும் வளசரவாக்கம் பகுதியில் உள்ள தனியார் சிபிஎஸ்இ பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை.
பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்படாதது குறித்து பெற்றோர்கள் சிலர் கூறும்போது, ’’சென்னை முழுவதும் விட்டுவிட்டு மழை பெய்துகொண்டே இருக்கிறது. விடுமுறை அறிவிப்பு காலையிலேயே வெளியான போதும், எங்கள் பள்ளிக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை. பள்ளிக்கு உள்ளேயே தண்ணீர் தேங்கி உள்ளது. பள்ளிக்கு வரும்போதோ, திரும்பச் செல்லும்போதோ எதாவது அசம்பாவிதம் நேர்ந்தால், அதற்கு யார் பொறுப்பு?’’ என்று கேள்வி எழுப்பினர்.
பள்ளி நிர்வாகம் விளக்கம்
எனினும் அரையாண்டுத் தேர்வு நடைபெற்று வருவதால் விடுமுறை அளிக்கப்படவில்லை என்றும் பள்ளிக் கல்வித்துறையின் விடுமுறை அறிவிப்பு தங்களுக்கு தெரிவிக்கப்படவில்லை என்றும் பள்ளி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.
அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்
அதேபோல சேலம், கந்தம்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் அரையாண்டுத் தேர்வு நடைபெற்று வருவதாகவும் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்படவில்லை எனவும் செய்திகள் வெளியாகி உள்ளன. அரசின் அறிவிப்பை காற்றில் பறக்கவிட்டு, பள்ளிகள் செயல்பட்டு வருவது பெற்றோர் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது. அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.