குடும்பங்களுக்குள் நடக்கும் மன உளைச்சல் மற்றும் கொடுமைகளால் நடக்கும் தற்கொலை சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கணவன் மற்றும் அவர்களது குடும்பத்தினரால் மனைவி மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு மன உளைச்சல் இருந்து வந்தது போல, சமீபகாலமாகவே மனைவி மற்றும் அவர்களது குடும்பத்தினரால் கணவன்மார்களுக்கும் மன உளைச்சல் ஏற்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. சில சமயங்களில் தற்கொலை வரை சென்று விடுகிறது. பெங்களூரில் தற்போது அப்படி ஒரு துயர சம்பவம் அரங்கேறியுள்ளது.


மனைவியால் மன உளைச்சல்:


பீகாரைச் சேர்ந்தவர் அதுல் சுபாஷ். பீகாரை பூர்வீகமாக கொண்டிருந்தாலும் இவர் பெங்களூரில் பணிபுரிந்து வந்தார். பெங்களூரில் உள்ள பிரபல ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி நிகிதா சிங்கானி. இவருக்கும், இவரது மனைவிக்கும் குழந்தை உள்ள நிலையில், சில காலங்களுக்கு முன்பு இவர்கள் விவாகரத்து பெற்றுவிட்டனர்.


2019ம் ஆண்டு திருமணம் அதுல் சுபாஷை திருமணம் செய்து கொண்ட நிகிதா அவரை விவகாரத்து செய்த பிறகு அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் கொலை முயற்சி, பாலியல் வன்கொடுமை, வரதட்சனை கொடுமை, குடும்ப வன்முறை என 9 வழக்குகளை அவர் மீது பதிவு செய்திருந்தார்.  இந்த வழக்குகளை உத்தரபிரதேசத்தில் உள்ள நீதிமன்றத்தில் நிகிதா தொடர்ந்திருந்தார்.  


3 கோடி கேட்டு டார்ச்சர்:


மனைவி விவகாரத்திற்கு பிறகும், மனைவி தொடர்ந்த வழக்கிற்கும் பிறகும் அதுல் சுபாஷ் மிகுந்த மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இந்த வழக்கிற்காக அவர் உத்தரபிரதேசத்திற்கும், பெங்களூருக்கும் அடிக்கடி பயணிக்க வேண்டிய கட்டாயத்திற்கும் ஆளாகியுள்ளார். அப்போது, அவரது மனைவி மற்றும் அவரது மனைவியின் குடும்பத்தினர் இந்த வழக்கை முடித்துக் கொள்ள ரூபாய் 3 கோடி அதுல் சுபாஷிடம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனால், அவர் மேலும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார்.


ஐடி ஊழியர் தற்கொலை:


இந்த சூழலில், பெங்களூரில் உள்ள தனது குடியிருப்பில் கடந்த திங்கள்கிழமை தூக்கிட்டு அதுல் சுபாஷ் தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த போலீசார் அவரது வீட்டின் பூட்டை உடைத்து சுபாஷின் சடலத்தை மீட்டனர். அவரது சடலத்தை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.


மேலும், அவர் தனது தற்கொலைக்கு முன்பு 24 பக்கங்களை கொண்ட தற்கொலை கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், தனது மனைவி, தனது மனைவியின் குடும்பத்தினர், உத்தரபிரதேசத்தில் உள்ள குடும்ப நல நீதிமன்ற நீதிபதி ஆகியோரால் தான் பாதிக்கப்பட்டதாக எழுதியுள்ளார். அந்த நீதிபதி தனது தரப்பு வாதத்தை கேட்கவில்லை என்றும் எழுதியுள்ளார்.


தற்கொலை வீடியோ:


கடிதம் மட்டுமின்றி தற்கொலை செய்வதற்கு முன்பு வீடியோ ஒன்றையும் அவர் பதிவு செய்துள்ளார். அதில் அவர் எந்த சம்பவங்கள் தன்னை தற்கொலைக்குத் தூண்டியது என்று வேதனையுடன் கூறியுள்ளார். தனக்கு நீதி கிடைக்கும் வரை தனது அஸ்தியை கரைக்க வேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். தன்னுடைய மனைவி குடும்பத்தினரிடம் இருந்து தன்னுடைய 4 வயது மகனை மீட்டு தனது பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் சுபாஷ் வேண்டுகோள் விடுத்துள்ளார். சுபாஷீின் சகோதரர் காவல்நிலையத்தில் தனது சகோதரரின் மனைவி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்துள்ளார். 


சுபாஷின் தற்கொலை சம்பவம் பெரும் சோகத்தை பெங்களூரில்  ஏற்படுத்தியுள்ளது. மனைவி மற்றும் அவரது குடும்பத்தின் கொடுமையால் ஐடி ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.



மன உளைச்சலோ, தற்கொலை எண்ணமோ மேலிடும்போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேகா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.


சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,


எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,


சென்னை - 600 028.


தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)