7 வயதில்தான் பள்ளிக்கல்வி; 16 வரை தேர்வு இல்லை- பார் புகழும் ஃபின்லாந்து கல்வி முறை!

Continues below advertisement

உலகமே பாராட்டித் தள்ளும் ஃபின்லாந்து கல்வி முறையை அறிந்திருக்கிறீர்களா?

ஃபின்லாந்து கல்வி முறையில் 7 வயதில்தான் வழக்கமான பள்ளிக் கல்வி ஆரம்பிக்கிறது. அதற்கு முன்பாக ECEC எனப்படும் ஆரம்பகால குழந்தைப் பருவக் கல்வி மற்றும் பராமரிப்பு அமைப்பின்கீழ் குழந்தைகள் வளர்க்கப்படுவர். இந்த அமைப்பு 0 முதல் 5 வயது வரையிலான குழந்தைகளுக்காக அறிமுகம் செய்யப்பட்டது ஆகும்.

Continues below advertisement

உள்ளூர் அதிகாரிகள் இந்த அமைப்பை நிர்வாகம் செய்வர். இந்த முறை தேர்வுக்கு மாணவர்களைத் தயார் செய்வதைவிட, குழந்தைகளின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு அவர்களைத் தயார்படுத்துகிறது.  

இதற்கான கட்டணம் குடும்பத்தின் வருமானம் மற்றும் குழந்தைகளின் எண்ணிக்கை ஆகியவற்றைக் கொண்டே நிர்ணயம் செய்யப்படுகிறது. அதேபோல ஃபின்லாந்தில் அனைத்து குடிமக்களும் சமமாகக் கருதப்பட்டு, அனைவருக்கும் கற்க சம வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இந்த தனித்துவ முறை, குழந்தைகளுக்கு தேர்வு அழுத்தத்தைக் குறைத்து, அவர்களுக்கு ஏற்ற வேகத்தில் கற்க உதவுகிறது.  

அடிப்படைக் கல்வி - Basic Education (7 முதல் 16 வயது வரை)

இந்த 9 ஆண்டுக் கல்வி காலகட்டம், வாழ்க்கைத் திறன்கள் மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சி மீது கவனம் செலுத்துகிறது. இந்த காலகட்டத்தில் பெரும்பாலான குழந்தைகள், அருகில் உள்ள பள்ளிகளில் சேர்ந்து படிக்கின்றனர். சில குழந்தைகள் மட்டும் சில கட்டுப்பாடுகளுடன் பிற பள்ளிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

உயர்நிலைக் கல்வி – Upper Secondary Education (16 வயதுக்குப் பிறகு)

அடிப்படைக் கல்விக்குப் பிறகு மாணவர்கள், பொதுக் கல்வி அல்லது தொழில் கல்வியைத் தேர்வு செய்யலாம். இரண்டு வகையான கல்விகளுமே 3 ஆண்டுகளுக்குக் கற்பிக்கப்படுகின்றன. சுமார் 40 சதவீத மாணவர்கள், தொழிற் கல்வியைத் தேர்வு செய்கின்றனர். தொழில்நுட்பம், உடல்நலன் மற்றும் போக்குவரத்து சார்ந்த தொழிற் படிப்புகள் பிரபலமானவை ஆக உள்ளன.

மாணவர் சேர்க்கை எப்படி?

ஃபின்லாந்து நாட்டில் மாணவர் சேர்க்கை என்பது, தியரி பாடங்களில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் நடத்தப்படுகின்றன. எனினும் சில படிப்புகளுக்கு மட்டும் நுழைவுத் தேர்வுகள் அல்லது திறனறிவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. கடினமான தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுகள் மூலம் மாணவர்களை மன அழுத்தத்துக்கு ஆளாக்குவதைக் காட்டிலும் ஃபின்லாந்தில், மாணவர்களின் தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் வாழ்க்கைத் திறன்களை மேம்படுத்தவே அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.