என்ஐஆர்எஃப் தரவரிசைப் பட்டியலில், அதிக இடங்களைப் பிடித்து, உயர்கல்வியின் தலைமையிடமாக தமிழ்நாடு திகழ்ந்து வருவதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் அடைந்துள்ளார்.


மத்தியக் கல்வி அமைச்சகம் சார்பில் நாட்டின் தலைசிறந்த கல்வி நிறுவனங்களுக்கு வழங்கப்படும் ) என்ஐஆர்எப் பட்டியல் (National Institutional Ranking Framework) நேற்று வெளியானது. இதில், தமிழ்நாட்டில் இருந்து ஏராளமான கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. நாடு முழுவதும் உள்ள 926 கல்வி நிறுவனங்களில் 165 கல்வி நிலையங்கள் தமிழ்நாட்டில்தான் உள்ளன.


டாப் 100  கலை, அறிவியல் கல்லூரிகளில் 37 தமிழ்நாட்டு கல்லூரிகள்


குறிப்பாக, ஒட்டுமொத்தப் பிரிவில் டாப் 100 கல்லூரிகளில் மொத்தம் 18 தமிழ்நாட்டு கல்லூரிகள், டாப் 100 பல்கலைக்கழகங்களில் 22, டாப் பொறியியல் கல்லூரிகளில் 14, டாப் 100 மாநிலப் பல்கலைக்கழகங்களில் 10, ஆராய்ச்சி நிறுவனங்களில் 9, டாப் 100  கலை, அறிவியல் கல்லூரிகளில் 37, டாப் 100 மருத்துவக் கல்லூரிகளில் 7 கல்வி நிறுவனங்கள் தமிழ்நாட்டில்தான் உள்ளன.


இவை தவிர்த்து பல் மருத்துவக் கல்லூரிகளில் 9, மேலாண்மைக் கல்லூரிகளில் 11, பார்மசி கல்லூரிகளில் 12, ஆர்க்கிடெக்சர் கல்லூரிகளில் 6, சட்டக் கல்லூரிகளில் 2 புத்தாக்க நிறுவனங்களில் 2 இடங்களை, தமிழ்நாட்டுக் கல்வி நிறுவனங்கள் பெற்றுள்ளன.


இந்த நிலையில், என்ஐஆர்எஃப் தரவரிசைப் பட்டியலில், அதிக இடங்களைப் பிடித்து, உயர்கல்வியின் தலைமையிடமாக தமிழ்நாடு திகழ்ந்து வருவதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் அடைந்துள்ளார்.


இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ’’இந்தியாவின் கல்வி மையமாக தமிழகம் தொடர்ந்து ஜொலிக்கிறது! என்ஐஆர்எஃப் தரவரிசைப் பட்டியலில், அதிக எண்ணிக்கையிலான உயர் கல்வி நிறுவனங்களுடன், நமது மாநிலம் மற்றவர்களை விட மிகவும் முன்னோக்கி நிற்கிறது. தரமான கல்வியில் ஓர் அளவுகோலை அமைத்துள்ளது.


திராவிட மாடலுக்கு ஒரு பெருமையான தருணம்


நமது தேசத்தின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் முன்னணியில் இருக்கும் திராவிட மாடலுக்கு இது ஒரு பெருமையான தருணம் ஆகும்.


நான் முதல்வன், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் போன்ற முதன்மைத் திட்டங்களின் மூலம் நமது மாணவர்கள் உயர் கல்வியில் புதிய உச்சங்களைத் தொடுவார்கள்’’ என்று முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.


இதையும் வாசிக்கலாம்: NIRF Ranking 2024: இந்தியாவிலேயே முதலிடம்: மருத்துவம், பொறியியல், கலை அறிவியல்.. தரவரிசையில் தமிழகம்தான் டாப்!- முழு பட்டியல்!