என்சிஇஆர்டி 11ஆம் வகுப்பு புதிய பாடப் புத்தகத்தில், சிறுபான்மையினரைத் திருப்திப்படுத்தும் வகையில், வாக்கு வங்கி அரசியல் அமைந்திருப்பதாகவும் இதனால் சமத்துவம் பாதிக்கப்படுவதாகவும் அச்சிடப்பட்டுள்ளது சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.
என்சிஇஆர்டி எனப்படும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில், மத்திய அரசின்கீழ் இயங்கும் பள்ளிகளுக்கான பாடத்திட்டத்தை உருவாக்கி, புத்தகங்களை அச்சிடுகிறது. குறிப்பாக சிபிஎஸ்இ, கேந்திரிய வித்யாலயா, ஜவஹர் நவோதயா வித்யாலயா உள்ளிட்ட பள்ளிகளில், என்சிஇஆர்டி பாடத்திட்டம் பின்பற்றப்பட்டு வருகிறது. காலத்தின் தேவைக்கு ஏற்பவும் ஆட்சியாளர்களின் கொள்கைக்கு உகந்த வகையிலும் அவ்வப்போது, இந்தப் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படுவது வழக்கம்.
சிறுபான்மைப் பிரிவின் நலனுக்கு முன்னுரிமை
அந்த வகையில் தற்போது 11ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப்புத்தகத்தின் (Class 11 Political Science textbook) பாடம் மாற்றி அமைக்கப்பட்டுளது. அதில் ’’இந்தியாவில் வாக்கு வங்கி அரசியல், சிறுபான்மையினரைத் திருப்திப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இதன் அர்த்தம், அனைத்து குடிமகளுக்கும் சமமான கொள்கைகள் என்பதை மீறுவதாகும். சிறுபான்மைப் பிரிவின் நலனுக்கு முன்னுரிமை அளிப்பதாகும்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய மதச்சார்பின்மை மீதான விமர்சனம் என்ற பகுதியில் இந்தப் பாடம் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், ‘’இது சிறுபான்மையினரை மேலும் அந்நியப்படுத்துவதற்கும் ஓரங்கட்டப்படுவதற்கும் வழிவகுத்தது. வாக்கு வங்கி அரசியல், சிறுபான்மையினருக்குள் உள்ள பன்முகத்தன்மையை ஒப்புக்கொள்ளத் தவறியதால், இந்தக் குழுக்களுக்குள் சமூக சீர்திருத்தப் பிரச்சினைகளை எடுத்துக்கொள்வதும் கடினமாக உள்ளது’’ என்றும் பாடப்புத்தகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
புதிதாக வார்த்தைகள் சேர்ப்பு
முன்னதாக 2023- 24ஆம் கல்வி ஆண்டு புத்தகத்தில், சிறுபான்மையினரைத் திருப்தி செய்வது என்ற வார்த்தைகள் எதுவும் இல்லை. இந்த நிலையில் இந்த வார்த்தைகள் தற்போது சேர்க்கப்பட்டுள்ளன.
பாபர் மசூதி பாடம் நீக்கம்
பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி மேற்கொண்ட ராம ரத யாத்திரையும் பாபர் மசூதி இடிப்பும் இந்திய வரலாற்றில் முக்கியமான வரலாற்று நிகழ்வுகளாக பார்க்கப்படுகிறது. பள்ளி பாட திட்டத்தில் இருந்து இந்த இரண்டு நிகழ்வுகளும் சமீபத்தில் நீக்கப்பட்டன. NCERT இயக்குநர் தினேஷ் பிரசாத் சக்லானி, இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார். பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், "வெறுப்பு குறித்தும் வன்முறை குறித்தும் கற்பிப்பது கல்வி அல்ல. பள்ளி பாடப்புத்தகங்கள் அவற்றில் கவனம் செலுத்தக்கூடாது.
பள்ளிப் பாடப்புத்தகங்களில் ஏன் கலவரம் பற்றிக் கற்பிக்க வேண்டும்? நாங்கள் நேர்மறையான குடிமக்களை உருவாக்க விரும்புகிறோம். வன்முறைமிக்க நபர்களை உருவாக்க விரும்பவில்லை" என்று தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.